சென்னை: தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்கிறார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ வந்தடைந்தார். சிகாகோ விமான நிலையத்தில், முதலமைச்சருக்கு தமிழ் சங்கங்கள் உற்சாக வரவேற்பை அளித்தன.
இந்நிலையில் சிகாகோவில், BNY மெலன் (The Bank of New York Mellon Corporation) வங்கியின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். BNY மெலன் வங்கி உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி நிதி பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டதாகும்.
இந்த வங்கி சொத்து சேவை, கருவூல சேவை, முதலீடுகள் மேலாண்மை போன்ற சேவைகளை அமெரிக்க நாட்டின், நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இவ்வங்கிக்கு பல கிளைகள் உள்ளன. தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும், அதிநவீன தொழில் நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Had productive discussions with BNY Mellon, on exploring potential AI investment opportunities.
— M.K.Stalin (@mkstalin) September 7, 2024
Let’s embrace the future through technology, harnessing AI’s transformative power!@TRBRajaa @Guidance_TN @TNIndMin#DravidianModel #InvestInTN #ThriveInTN #LeadWithTN pic.twitter.com/7W8fMKe38v
தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு தமிழ்நாட்டு அரசுடன் இணைந்து வங்கி சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். BNY மெலன் வங்கி தனது ஆறு முக்கிய மையங்களில் ஒன்றாக சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அதிகளவு கணினி பொறியியல் படித்த மாணவர்கள் உள்ளதால் சென்னையில் சர்வதேச தரத்தில் பயிற்சி மையம் அமைத்திடவும், தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், மென்பொருள் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிகாகோ நகரில் உள்ள ஈட்டன் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், சென்னையில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : அமெரிக்காவில் டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடிக்கு ஒப்பந்தம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Trilliant with TN Govt MoU