தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர்" (Makkaludan Mudhalvar) திட்டத்தை நாளை (ஜூலை 11) காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார்.
இந்த நிலையில், நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்து வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஏற்கனவே ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் கோவையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தருமபுரியில் இந்த திட்டமானது நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இதேபோல், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் முதலில் நகராட்சிகளில் துவங்கப்பட்ட நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளுக்கு துவங்கி வைக்க வருகிறார் மு.க.ஸ்டாலின். மேலும், இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில், 2,500 முகாம்கள் மூலம் ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, கூட்டுறவுத் துறை உட்பட 13 அரசு துறைகள் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது.
இந்நிலையில், நாளை நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கி திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். பின்னர் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கவுள்ளார். மேலும், 2014 நபர்களுக்கு ரூ.500 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளாது.
எனவே, நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை இன்று ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடன் நாடாளுமன்ற உறுப்பினர் மணி, தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்டச் செயலாளர் பழனியப்பன் ஆகியோர் இருந்தனர்.
இதையும் படிங்க: இந்த சின்ன பையன் ஆர்.எஸ்.பாரதியை என்ன செய்றேன்னு பாருங்க