சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (ஜூலை 23) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு வணிகர் நல வாரியம் முதலமைச்சரை தலைவராகவும், வணிகவரித்துறை அமைச்சரைத் துணைத் தலைவராகவும் கொண்டு அமைக்கப்பட்டது. இந்த வாரியம் உருவாக்கப்பட்ட போது அலுவல் சாரா உறுப்பினர்களாக 20 பேர் இருந்தார்கள். கடந்த ஆண்டு ஜூலை 7ஆம் தேதி இந்த எண்ணிக்கை 30 நபர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வாரியம் தொடங்கப்பட்டபோது வாரியத்தின் துவக்க நிதி ரூ.2 கோடியாக இருந்தது. அது 2012ஆம் ஆண்டு ரூ.5 கோடியாகவும், 2017ஆம் ஆண்டு ரூ.10 கோடியாகவும் உயர்த்தப்பட்டது. இப்போது ரூ.4 கோடியே 5 லட்சம் திரட்டு நிதியாக கையிருப்பு உள்ளது.
மேலும், தற்போது வரை தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டம், மதிப்பு கூட்டு வரிச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற மொத்த வணிகர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 219 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும்.
இதுமட்டுமல்லாது, இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இவ்வாரியத்தின் மூலமாக ஏராளமான நலத்திட்ட முன்னெடுப்புகள் செய்யப்பட்டு, இதுவரை 8 ஆயிரத்து 883 வணிகர்கள் பல்வேறு நிதி உதவிகளை பெற்றுள்ளார்கள். 3 கோடியே 29 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்திலும் இது போன்ற பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம்.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் கடைகளுக்கான குத்தகை 9 ஆண்டுகள் என்று இருந்ததை 12 ஆண்டுகள் என விதிகளில் திருத்தம் செய்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாக பேசிய முதலமைச்சர், "வணிக நிர்வாகிகளை சமீபத்தில் சந்தித்தபோது தமிழ்நாட்டின் அனைத்துக் கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
இதுபோன்ற செயல்கள் அரசு சொல்லி, வணிகர்கள் செய்வதாக இல்லாமல், வணிகர்களே முன்வந்து செய்வதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழை காணமுடியவில்லை என்று யாரும் சொல்லமுடியாத அளவிற்கு பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வணிகர்கள் முன்வரவேண்டும்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதியும் படிங்க: "பொது காப்பீட்டு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காதது நியாயமல்ல" - சு.வெங்கடேசன்