சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(பிப்.19) பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அதில், தகவல் தொழில்நுட்பம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டில் பல்வேறு துறைத் தலைமை அலுவலகங்கள் மற்றும் சார்பு அலுவலகங்களுக்குத் தேவையான மென்பொருள் மற்றும் கணினிகள் வழங்கவும், அலுவலர்களுக்கு உரியத் திறன் பயிற்சி அளித்து மின் அலுவலகத் திட்டத்தை (e-office) விரிவுபடுத்த, வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு சார் இணையவழிச் சேவைகளைத் துரிதமாக அளித்திடும் வகையில், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT-Electronics Corporation of Tamil Nadu) மூலமாக, 5 ஆண்டுகளில், பேரிடர் தரவு மீட்பு வசதிகளுடன், மேகக் கணினி கட்டமைப்பு கொண்டதாக, மாநில தரவு மையத்தை (State data centre) உயர்த்த ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இணைய உலகத்தின் தகவல் பரிமாற்றத்தைப் பரவலாக்கும் வகையில், சென்னையில் உள்ளது போன்று, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், ஆயிரம் முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கடந்த 2000 ஆம் ஆண்டில், சென்னையில் டைடல் நிறுவனத்தை அமைத்து தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார். சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் தகவல் தொழில்நுட்பத்தில் இணைந்திடும் நோக்கில், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பதற்கு, மதுரையில் 6 இலட்சத்து 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ரூ. 350 கோடி மற்றும் திருச்சியில், ஒரு இலட்சத்து 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ரூ.45 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், 13 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் (Neo Tidel Parks) அமைக்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு தரப்பில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் அரசு ஆய்வு செய்து வருகிறது.
இதில், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத் துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து வரையறைகளைத் தெளிவாக வகுத்திட, முதலமைச்சரின் ‘ தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்’ (Tamil Nadu Artificial Intelligence Mission) ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனங்களில், தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வி பேராசிரியர்கள், மின்னணு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் துறை வல்லுநர்கள் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விண்வெளி, பொறியியல் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற உயர் தொழில்நுட்ப அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், கோவை விளாங்குறிச்சியில், 20 லட்சம் சதுர அடியில், இரண்டு கட்டங்களாக அதிநவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வறுமையை ஒழிக்க 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்'..! பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு