சென்னை: அகில இந்தியக் குடிமைப் பணி தேர்வுகளில், தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறும் மாணவர்களில் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. குறிப்பாகக் கடந்தாண்டு மே மாதம் வெளியான அகில இந்தியக் குடிமைப் பணி தேர்வுகளின் முடிவில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. அதேபோல் தேர்வான 685 பேரில் 27 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். இதில் குடிமைப்பணித் தேர்வுகளில், தமிழக இளைஞர்களின் பங்களிப்பை அதிகரித்திட, உண்டு உறைவிட வசதியுடன் 6 மாதம் பயிற்சி, ’நான் முதல்வன் திட்டத்தின் கீழ்’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மத்திய குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திட, ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுக்குத் தயாராக மாதந்தோறும் 7,500 ரூபாய் மற்றும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இத்திட்டம், 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC), ரயில்வே (RRB) மற்றும் வங்கிப் பணி (IBPS) தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்குச் சென்னை, கோவை, ஆயிரம் மதுரை மண்டலங்களில் உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கிட 6 கோடி ரூபாய் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்." என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகளை நடத்துகின்றது. இதில் ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ்(IPS), ஐஎஃப்எஸ்(IFS) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான குடிமைப் பணித் தேர்வு மே மாதம் 26 ஆம் தேதி முதல், நிலைத் தொடங்குகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு மார்ச் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வறுமையை ஒழிக்க 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்'..! பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு