சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் நேற்றிரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, செம்பியம் காவல்துறை 10 தனிப்படைகள் அமைத்து மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக, எட்டு நபர்களை செம்பியம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், ஆற்காடு சுரேஷ் என்பவர் பழி தீர்க்கும் வகையில் தான் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து, அயனாவரம் வீட்டிற்கு கொண்டு சென்று அங்கு சடங்குகள் நிறைவு பெற்ற பிறகு, பெரம்பூர் பகுதியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் அஞ்சலிக்காக சிறிது நேரம் வைக்க உள்ளனர்.
அதன்பிறகு, செம்பியம் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றது. பின்னர், நாளை பிற்பகல் அவரது உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரி ஒருவர் வெளிநாட்டில் இருப்பதால், அவர் நாளை காலை தான் சென்னை வர உள்ளதாகவும், அதன் காரணமாக நாளை பிற்பகல் வரை ஆம்ஸ்ட்ராங் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் அவரது உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கும் மாநகராட்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் வர இருப்பதால் எந்த வழியாக கொண்டு செல்லலாம் என்பது குறித்தும் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் உடலில் பல்வேறு இடங்களில் பலமாக வெட்டு காயங்கள் விழுந்து உள்ளது. இதில் கைவிரல்கள் துண்டாகியுள்ளது. வலது கணுக்கால் துண்டாகியுள்ளது. இதன் காரணமாக அவரது உடல் பதப்படுத்துவதற்காக எம்பாமிங் (Embalming) செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் பழிவாங்கல் இல்லை; வேறு சிலர் மீது சந்தேகம் உள்ளது: சத்தீப் ராய் ரத்தோர் தகவல் - armstrong murder case