சென்னை: விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, கடந்த வெள்ளிக்கிழமையன்று தேர்தல் பிரச்சார மேடையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், புகழேந்தி காலமான நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான டாக்டர் பழனி, சட்டப்பேரவை செயலகத்துக்கு முறைப்படி சனிக்கிழமை அன்று தகவல் தெரிவித்து இருந்தார்.
அதனைப் பெற்றுக் கொண்ட சட்டப்பேரவை செயலகம், தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியிருந்தது. விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணம் அடைந்த காரணத்தால், தொகுதி காலியாக உள்ளது என சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது.
சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால், ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனற நிலையில், விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டிருப்பதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு நடைபெறுமா எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
முன்னதாக, விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி, காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்ததால், தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடந்து, நாடாளுமன்றத் தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மேலும், 7 கட்டமாக நடைபெற உள்ள நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலின் இறுதியில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இன்று நிகழும் அரிய சூரிய கிரகணம்.. அடுத்து எப்போது? இந்தியாவில் ஏன் காண முடியாது? ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன? - Solar Eclipse 2024