திருவாரூர்: திமுக குறித்தும், தமிழக அமைச்சர்கள் குறித்தும் முகநூல் பக்கத்தில், அவதூறு பரப்பும் வகையில் வீடியோ, புகைப்படம் மற்றும் கருத்துக்களை பதிவிட்டு வருபவரை கைது செய்ய வேண்டும் என்று திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர், கொரடாச்சேரி அருகே கப்பலுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சதா சதீஷ். திருவாரூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராக இருந்து வரும் இவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் குறித்து, தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, திருவாரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த், திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சதா சதீஷ் மீது, சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், இரு குழுக்களுக்கு இடையே பிரச்னையை உண்டாக்குதல் போன்ற நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்படி, உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளா் மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து அவதூறு பரப்பும் கருத்துக்களை பதிவிட்ட சதா சதீஷ் என்பவரின் முகநூல் பக்கத்தை ஆய்வு செய்துள்ளனர்.
இவ்வாறு போலீசார் நடத்திய விசாரணையில், சதா சதீஷ் அவதூறு பரப்பும் கருத்துக்களை பதிவிட்டது உறுதியானதால், அவரை காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் சர்ச்சை; காலாவதியானதை இருப்பு வைப்பதில்லை.. அறங்காவலர் குழு தலைவர் விளக்கம்!