திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் திருக்கார்த்திகை தீபவிழாவின் 10ம் நாளான இன்று (டிச.13) வெள்ளிகிழமை காலை அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாகவும் அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக கோயிலில் உள்ள சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில் விநாயகர், முருகர், உண்ணாமலை உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் பல்வேறு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அண்ணாமலையார் சன்னதி அருகில் உள்ள கொடிமரத்தின் முன்பே தீப தரிசன மண்டபத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளித்து தீப மண்டபத்தில் எழுந்தருளினர்.
பின்னர், சரியாக 5:59 மணியளவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளிக்கும் சிவனின் பாதி சக்தி என்பதை உணர்த்தும் வகையில் அர்ந்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். அப்போது கோயிலின் கொடி மரத்தின் அருகில் உள்ள அகண்டத்தில் பருவத ராஜகுலத்தினர் தீபம் ஏற்றப்படும். இதனைத் தொடர்ந்து, சரியாக மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது அனேகன் ஏகனாக ஜோதி வடிவமாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக மகா தீபம் ஏற்றப்பட்டது.
சுமார் 2668 அடி உயரமுள்ள மலையின் மீது 5 அடி உயரம் கொண்ட கொப்பறையில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த 4500 கிலோ நெய் நிரப்பட்டு, 2500 மீட்டர் காடா துணியை திரியாக அமைத்து மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீப தரிசனத்தை சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து, லட்சக்காணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் வந்தனர். இன்று ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எறியும். 11 நாட்களுக்கு பிறகு மலை மீது இருந்து கொப்பரையை அண்ணாமலையார் கோயிலுக்கு இறக்கப்பட்டு கொப்பரையிலிருந்து நெய் சேகரிக்கப்பட்டு அதனுடன் பல்வேறு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து தீப மை தயாரிக்கப்பட்டு ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜருக்கு நெற்றியில் திலகமிட்டு பின்னர் தீப மைய்யினை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த தீபத் திருவிழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: "அண்ணாமலையாருக்கு அரோகரா" - திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் முழு விவரம்! - KARTHIGAI MAHA DEEPAM FESTIVAL