வேலூர் : அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் தரவரிசை பட்டியலில்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் 3 பேர் இடம்பிடித்துள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான ஜெ.மாதவன், எம்.சையது அலி, அ.ராஜசேகர் ஆகியோர் அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெவ்வேறு துறைகளில் சிறந்த விஞ்ஞானிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான தரவரிசை பட்டியலில் 22 அறிவியல் துறை மற்றும் 174 துணை துறைகளின் ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களான முனைவர் ஜெ.மாதவன் வேதியல் துறை, முனைவர் எம்.சையது அலி கணிதத்துறை, முனைவர்.அ.ராஜசேகர் உயிரி தொழில்நுட்பவியல் துறை ஆகிய மூன்று பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முனைவர் ஜெ.மாதவன் இணைப் பேராசிரியராக வேதியியல் துறையில் பணியாற்றுகின்றார். ஜெ.மாதவன் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றார். இவர் எரிபொருள் பயன்பாடு மற்றும் சூரிய எரிசக்தி மின்கலம் மற்றும் நீர் மறுசுழற்சி குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றார். இவர் 160க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி இதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'வரலாறு முக்கியம் அமைச்சரே'.. சிந்து சமவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறுவது என்ன?
டாக்டர் எம்.சையத் அலி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். எம்.சையத் அலி நியூரல் நெட்வொர்க் அமைப்புகள், மல்டி ஏஜென்ட் அமைப்புகள் மற்றும் பகுதியளவு வரிசை அமைப்புகளின் கோட்பாடுகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.
சையத் அலி 250க்கும் மேற்பட்ட கட்டுரைகளை அறிவியல் மேற்கோள் அட்டவணையிடப்பட்ட வெளியீட்டாளர்களுடன் வெளியிட்டுள்ளார். அவரது ஆராய்ச்சிக்கு கூடுதலாக அவர் தேசிய நிதி நிறுவனங்களான NBHM, CSIR, SERB மற்றும் DST ஆகியவற்றிலிருந்து மானியங்களை பெற்றுள்ளார்.
உயிரிதொழில்நுட்பவியல் துறையில் இணைப் பேராசிரியராக முனைவர் அ.ராஜசேகர் பணியாற்றி வருகிறார். ராணிப்பேட்டை, சிப்காட், வாணியம்பாடி, ஆம்பூர் பேராம்பட்டு போன்ற பல்வேறு இடங்களில் தோல் பதனிடும் போது வெளியேறும் கழிவுகளில் நச்சுத்தன்மை வாய்ந்த குரோமிய உலோகம் உள்ளது.
இவ்வகை கழிவுகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலோகக் கழிவுகளை அகற்றவும், கழிவுகளின் உற்பத்தியை குறைக்கவும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். முக்கியத்துவம் வாய்ந்த நுண்ணியிரி உலோக ஆராய்ச்சிக்காக தேசிய உயிரியல், அறிவியல் தொழில் நுட்பவியல் துறை, ரூ.1.5 கோடி நிதியை வழங்கியுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழுவுடன் இணைந்து DST, DPT, TANSCHE போன்ற கல்வி நிறுவனங்களிலிருந்து உதவித்தொகை பெற்று ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக உலகளாவிய முதல் இரண்டு சதவீத எண்ணிக்கைக்கு உள்ளானோர் பட்டியலில் உள்ள நபர்களில் இவர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.