திருப்பூர்: பனியன் தொழிலை நம்பி நாடு முழுவதும் இருந்து வரும் பல லட்சம் மக்களின் சரணாலயமாக திருப்பூர் இருக்கிறதென்றால், இங்கு பாசனத்துக்காக வெட்டப்பட்ட ஒரு குளம் காலப்போக்கில் பல ஆயிரம் பறவைகள் வலசை வரக்கூடிய சரணாலயமாக உருவாகி தற்போது ராம்சார் குறியீடு அங்கீகாரம் பெற்றுள்ளது.
தமிழகத்தை ஆண்டு வந்த விஜயநகரப் பேரரசின் இரண்டாவது கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் தான் விஜயநகர அரசின் வலு குறையத் தொடங்கிய காலம். 1489ஆம் ஆண்டிலிருந்து 1527 வரை ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதிகளான அந்தியூர், ஆறுதொழு, குன்னத்தூர், கொளிஞ்சிவாடி, சர்க்கார் பெரியபாளையம், டணாயக்கன் கோட்டை, நசியனூர், மறவபாளையம், வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்து வந்த சிற்றரசர் தான் நஞ்சராய நாயக்கர்.
இவர் தனது ஆட்சிக்காலத்தில் இப்போதைய திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில், நல்லாற்றின் குறுக்கே பாசனப் பயன்பாட்டுக்காக 400 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்றை வெட்டினார். பாசனப் பயன்பாட்டில் இருந்த இந்த குளம் தற்போது 500 ஆண்டுகளைக் கடந்துள்ள பெரும் நீர்த்தேக்கமாக இருக்கிறது.
இந்தக் குளத்தில் இருந்து பாசனப் பயன்பாடு இல்லை. ஆனால், நல்லாற்றில் இருந்து வரும் தண்ணீரானது இந்தக் குளத்தின் பெரும் பகுதியில் தேங்கி சதுப்பு நிலமாக உருவாக்கியது. பெரும் புதர்க்காடாகவும், நல்ல உயிர்ச்சூழல் மிக்க பகுதியாகவும் இயற்கையாகவே மாறிய இந்த குளத்தை தேடி பல ஆயிரம் பறவைகள் வந்து செல்கின்றன.
வலசை பறவைகள்: இதில் குறிப்பாக கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, பழுப்பு நாரை, செந்நீல நாரை, பெரிய கொக்கு, நடுத்தர கொக்கு, சிறிய கொக்கு, உண்ணி கொக்கு, மடையான், இராக்கொக்கு, சிறிய நீர்காகம், நடுத்தர நீர்காகம், பளபளக்கும் அருவாள் மூக்கன், நீல தாழைக்கோழி, தென் சிட்டு, நெடுங்கால உள்ளான், கானாங்கோழி, புள்ளிமூக்குவாத்து போன்ற பல ஆயிரக்கணக்கான பறவைகள் வழக்கமாக வருகின்றன.
இது தவிர ரஷ்யா, மங்கோலியப் பகுதிகளில் வாழ்கின்ற பட்டைத்தலை வாத்துகள் கூட இந்தக் குளத்துக்கு வலசை வந்து, இனப்பெருக்கம் செய்துவிட்டு குடும்பத்தோடு திரும்பிச் செல்கின்றன. இவ்வாறு வரும் பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து வருவதுடன், 25 ஆயிரம் அடி உயர இமயமலையைத் தாண்டி இங்கு வருகின்றன. காரணம், இங்குள்ள சாதகமான சூழல் அவ்வாறு பறவைகளை வரவைக்கிறது. இதனால் இயற்கையாகவே பறவைகள் சரணாலயமாக இந்தப்பகுதி உருவெடுத்து உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்த குளத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணி மற்றும் குளத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடந்தது. இதனால் குளத்தில் இருந்த இயற்கைச்சூழல் மாறத் தொடங்கி பறவைகள் வரத்து குறைந்தது. ஆனாலும் அந்தப் பணிகள் நிறைவடைந்த சில ஆண்டுகளில் மீண்டும் பறவைகள் வந்து செல்லத் தொடங்கி உள்ளன.
கடந்த குளிர்காலத்தில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்துள்ளதாக திருப்பூர் இயற்கை கழகத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தான் கடந்த 2022ஆம் ஆண்டு நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழ்நாட்டின் 17வது சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த குளத்தில் ரூ.7.5 கோடியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படும் எனவும் அரசு அறிவித்தது.
ராம்சார் அங்கீகாரம்: இதையடுத்து, வாட்ச் டவர் அமைப்பது, விளக்கக்கூடம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவும் நடைபெறவில்லை. குளத்தில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டு உள்ளது. சீரான தண்ணீர் வரத்தும் இருக்கிறது. இந்த நிலையில், மத்திய அரசு நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை ‘ராம்சார் குறியீடு’ தளத்தில் சேர்த்து அறிவித்துள்ளது.
இந்த ராம்சார் குறியீடு பெற்றதன் மூலமாக, யுனெஸ்கோ உடன் சேர்ந்து இந்த சரணாலயம் முழுமையான பாதுகாப்புக்குள் வரும் என சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இது குறித்து திருப்பூர் இயற்கை கழகத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், ‘நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக உருவாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டோம். தற்போது சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு ராம்சார் குறியீட்டு தளத்தில் இதை சேர்த்து இருக்கிறது. இந்தியாவில் 85வது தளமாக நஞ்சராயன் குளம் இணைந்துள்ளது. இந்த ராம்சார் குறியீடு தளமானது சர்வதேச அமைப்பான யுனெஸ்கோவுடன் இணைந்து சதுப்பு நிலங்களை பாதுகாக்க மத்திய அரசு செயல்படுத்தும் தளமாகும்.
தமிழக அரசுக்கு கோரிக்கை: இதன்மூலம் இங்கு வலசை வருகின்ற வெளிநாட்டு, உள்நாட்டுப் பறவைகள் பாதுகாக்கப்படும். மேலும், இங்கு உள்நாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்துக்கு கருவேல மரங்கள் நடவு செய்ய வனத்துறையிடம் கோரி இருக்கிறோம். இதன் மூலமாக திருப்பூர் புதிய அடையாளம் பெறும்" என்றார்.
திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அழகுராஜா கூறுகையில், 'நஞ்சராயன் குளம் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு இன்னும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. வாட்ச் டவர், நடைபாதை அமைக்கும் பணிகளை விரைவில் செய்ய வேண்டும். நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார்.