தேனி: அகில இந்திய பார்வடு பிளாக் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் கர்ணன், தேனி அருகே உள்ள கருவேல் நாயக்கன்பட்டியில் இன்று (ஏப்.09) செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், "அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் அகில இந்திய ஃபாவர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக கர்ணன் என்ற நான்தான் பொறுப்பு வகிக்கிறேன். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இந்தியா கூட்டணியில் உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அகில இந்திய ஃபாவர்ட் பிளாக் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தொண்டர்களும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நான் தான் என்று, முன்னாள் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். பி.வி.கதிரவனுக்கும், தமிழ்நாட்டின் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பி.வி.கதிரவன் அதிமுகவுடன் இணைந்ததும், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகளை, அவர் கட்சியை விட்டு நீக்கியதும் எந்த விதத்திலும் கட்சி நிர்வாகிகளையும், கட்சியையும் கட்டுப்படுத்தாது.
பி.வி.கதிரவன் உசிலம்பட்டி, மதுரை ஆகிய பகுதிகளைத் தவிர்த்து கட்சியை எங்கும் வளர்க்கவில்லை, மாநாடு நடத்துகிறேன் என பலரிடம் கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பெற்றுள்ளார். பி.வி.கதிரவன் பொறுப்பில் இருந்த போது, கட்சிக்கு என்று வங்கிக் கணக்கு கூட இல்லை. அதிமுகவில் ஒரு சீட் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக பொய் சொல்லி, கட்சியின் தலைமை நிர்வாகி ஒருவரை அழைத்து வந்து ஏமாற்றினார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பி.வி.கதிரவன் நீக்கப்பட வேண்டும் என்று தேசிய தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர், கட்சி கட்டுப்பாட்டை மீறி அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளதும், அந்த அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தொண்டர்களை திசை திருப்புவதும், கட்சி நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து, கட்சியின் தேசிய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் முடிந்தபின் பி.வி.கதிரவன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் கர்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தங்கர் பச்சானுக்கு ஜோசியம் பார்த்த கிளி பறிமுதல்.. அன்புமணி ராமதாஸ் கண்டனம்!