திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி மகள் ரேவதி. இவரை 2019ஆம் ஆண்டு, ரேவதி கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தங்கநகைக்காக அவருடைய சித்தப்பா மகனான செல்வராஜ் மற்றும் அவருடன் திருமணம் மீறிய உறவிலிருந்த சித்ரா என்பவரும் இணைந்து, விறகு வெட்டுவதற்காகக் கூறி சுட்ட குண்டா காப்புகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ரேவதியின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து இருவரும் சேர்ந்து கொலை செய்தனர்.
முதலில் தற்கொலை போன்று காணப்பட்ட இந்த சம்பவம், பின்னர், கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது, இதுதொடர்பான வழக்கு, திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சித்ரா மற்றும் செல்வராஜ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நீதிபதி மீனா குமாரி தீர்ப்பு வழங்கினார்.
அதுமட்டுமின்றி, அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் தண்டனை; நகையை கொள்ளையடித்துச் சென்றதற்காக மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் மற்றும் அபராதத்தைக் கட்ட தவறினால் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
மேலும், சாட்சி கூறிய மீனா, ராஜேஷ், வெங்கடேசன் ஆகிய மூவருக்கும் இலவச சட்ட மையம் சார்பில் தல ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் பி.டி சரவணன் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்