திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை தேடினர். ஆனால், சிறுத்தையானது வீட்டிலிருந்து அருகே உள்ள மேரி ஹிமாகுலேட் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து நடமாடியது.
மேலும், பள்ளியில் பாதுகாவலராக பணியில் இருந்த கோபால் என்பவரின் தலையில் சிறுத்தை தாக்கி அருகில் இருந்த கார்செட்டிற்குள் தப்பிச் சென்றது. பின்னர், காயமடைந்த கோபாலை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தற்போது மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவலறிந்த மேரிஇமாக்ளேட், YMCA, CSI, தோன்மிக்சாவியோ உள்ளிட்ட பள்ளிகள் மாணவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக ஓசூரில் இருந்து வனத்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கார் செட்டில் சிக்கிக்கொண்ட நபர்களை, அவருடைய உறவினர்கள் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு பேசியபோது, சிறுத்தை அருகாமையிலேயே இருப்பதாகக் கூறியுள்ளனர். இதன் காரணமாக சிறுத்தை கார்செட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "சிறுத்தையைப் பிடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன எனவும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று அறிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து பேசிய வனத்துறை அதிகாரி, "இன்னும் சிறிது நேரத்தில் கால்நடை மருத்துவர் குழுவினர் வந்தவுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என கூறினார்.
இந்த சம்பவம் திருப்பத்தூர் நகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பத்தூர் கார் செட்டில் சிறுத்தை.. கார் செட்டில் சிக்கிய ஐந்து பேரின் நிலை என்ன? - Leopard in Tirupathur School