திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரத்தில் நகர்மன்ற மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், இந்தப் பள்ளியில் பயின்ற 66 மாணவர்களில் 64 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் அபிநிஷா என்ற மாணவி 500க்கு 492 என்ற சிறந்த மதிப்பெண்ணைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இன்று கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. எனவே, பத்தாம் வகுப்பை நிறைவு செய்த மாணவி அபிநிஷா 11ஆம் வகுப்பையும் அப்பள்ளியிலேயே தொடர்வதால், அவரும் இன்று ஆர்வமுடன் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, மாணவி அபிநிஷாவுக்கு அவருக்கு ஆங்கிலப் பாடம் எடுத்த ஆசிரியை மகேஸ்வரி தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அந்த தங்க மோதிரம் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிராம் எடை உள்ளது. இதனைக் கண்டு மாணவி அபிநிஷா ஆனந்தக் கண்ணீர் விட்டார். இதைத் தொடர்ந்து, அபிநிஷாவின் சமூக அறிவியல் ஆசிரியர் சுதந்திரா அபிநிஷாவிற்கு வெள்ளி கைச்சங்கிலி ஒன்றை பரிசளித்துள்ளார். இதனால் தொடர் பரிசுகளை தந்த ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் அபிநிஷாவை உயர் படிப்பிலும் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைக்க வேண்டுமென வாழ்த்துகள் தெரிவித்தனர்.
மேலும், இதே பள்ளியில் பத்தாம் வகுப்பில் கணிதம் பாடப்பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற நான்கு மாணவிகளுக்கு கணித ஆசிரியை வெள்ளி நாணயத்தைப் பரிசாக வழங்கியுள்ளார். இவ்வாறு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் சாதனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள் பரிசளிக்கும் போக்கு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு.. மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!