தேனி: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மெதுவாக தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன முதல் மிதமான மழை பெய்து வரும் காரணத்தால், இன்று (டிச.13) தென் மாவட்டங்களில் அதி கனமழையும், வட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், தேனி மாவட்டம் மதுரை - கொச்சி தேசிய நெடுஞ்சாலையான போடி மெட்டு மலை சாலையில் பதினோராவது கொண்டை ஊசி வளைவில் புலியூத்து அருகே நேற்று (டிசம்பர் 12) இரவு நேரத்தில் தொடர் கனமழை பெய்து வந்ததன் காரணமாக, மலைச்சாலையில் ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்தது இதனால் மலைச்சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த ராட்சத பாறையானது சாலையின் நடுவே இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. இலகு ரக வாகனங்கள் மட்டுமே மெதுவாக அந்த சாலையை கடந்து செல்லும் நிலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், குரங்கணி காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து சென்று பாறையை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கேரளா மாநிலத்தில் இருந்து வரும் பெரும்பாலான வாகனங்கள் இந்த விபத்தினால் சாலையை கடக்க முடியாமல் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். இதனால் தேனி மாவட்டம், போடி மெட்டு வழியாக கேரளா செல்லும் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சுருளி மற்றும் கும்பக்கரை அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை!
இதேபோல, திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை முதல் தற்பொழுது வரை கனமழை பெய்து வரும் சூழலில், இன்று (டிச.13) காலை மாஞ்சோலையில் இருந்து அம்பாசமுத்திரத்திற்கு, சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று வந்த நிலையில் மணிமுத்தாறு அருவியின் கீழ் பகுதியில் உள்ள சாலையில் மிகப்பெரிய பாறை உருண்டு விழுந்து சாலை இரண்டாக துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாக பஸ்ஸில் வந்த பயணிகளை மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இலகு ரக சரக்கு வண்டிகளை கொண்டு சென்று அதன் மூலம் பயணிகளை மீட்டு வந்தனர்.
இதுமட்டும் அல்லாது, இன்று (டிசம்பர் 13) காலை 8 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு அருகே மாஞ்சோலை ஊத்து பகுதியில் தான் 540 மில்லி மீட்டர் அதாவது 50.4 சென்டி மீட்டராக மழையின் அளவு பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.