திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிவிஎஸ்(TVS) நகரில் நேற்று முன்தினம் (செப்.21) மாலை சுமார் 4.30 மணியளவில் அடையாளம் தெரியாத 4 நபர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்து அகிலேஷ் என்ற இளைஞரின் பூணூலை அறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அகிலேஷின் தந்தை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் புகார் எண் 460/24 CSR பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.அதில், “சம்பவம் நடந்ததாக கூறப்படும் தேதியில், அந்த இடத்தில் அகிலேஷ் பயணித்ததாக கூறப்பட்ட சாலையிலும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதையும் படிங்க: நெல்லையில் இளைஞரின் பூணூலை அறுத்த விவகாரம்; குடும்பத்தாரை நேரில் சந்தித்து எல்.முருகன் ஆறுதல்!
மேற்படி பதிவுகளில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் மற்றும் நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனங்களில் யாரும் அகிலேஷ் என்பவரிடம் வந்து, பூணூலை அறுத்ததாக புலப்படவில்லை. மேற்படி சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டதிலிருந்தும், சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளை விசாரணை செய்ததிலிருந்தும் அகிலேஷ் என்பவர் கூறியபடி நான்கு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து சென்றதாக காவல்துறை விசாரணையில் புலப்படவில்லை என கூறியுள்ளனர்.