திருநெல்வேலி: சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மருத்துவமனையாகத் திகழ்ந்து வருகிறது நெல்லை அரசு மருத்துவமனை. இங்கு நாள்தோறும் 2000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதிலும் குறிப்பாக இதயவியல் துறை, சிறுநீரகவியல் துறை, நரம்பியல் துறை என அனைத்து துறைகளும் 1500க்கு மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இம்மருத்துவமனையில் நடைபெற்ற இரண்டு முக்கிய சிகிச்சைகள் குறித்து கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது, "தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் மகன் ஸ்டாலின் கிரேஸ் டேனிசன் என்ற 11 வயது சிறுவன், கடந்த மாதம் 26ஆம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது , எதிர்பாராத விதமாக அவரது மார்பின் இடது புறத்தில் ஆறு அங்குலம் நீளமான கத்தரிக்கோல் குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அப்போது, பணியிலிருந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததோடு மட்டுமல்லாமல் துரிதமாக செயல்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.
சிறுவன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட 30 நிமிடங்களில் அறுவை சிகிச்சை பணிகள் தொடங்கப்பட்டு 3 மணி நேரம் சிகிச்சை நடைபெற்றது. இதில் இருதயத்தின் தமனி பகுதியில் ஓட்டை விழுந்திருந்ததால் அதிக இரத்த இழப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்து வெற்றிகரமாக நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சிறுவனின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.
தற்போது அவர் பள்ளி செல்லும் அளவில் தேறி உள்ளார். மேலும், மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவனுக்கு, குடலில் ஏற்பட்ட அழற்சி காரணமாக கணையம் பகுதியில் சீல் வைத்ததால் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதற்கு அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவ வளர்ச்சி நவீன உபகரணங்கள் கொண்டு என்டாஸ்கோபி முறையில் (Stent) பொருத்தி 15 நிமிடங்களில் குடல் சலத்தை அகற்றி உள்ளனர்.
தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மருத்துவமனையில் தான் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார். பின்னர் மருத்துவ அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டு சிகிச்சை முறைகள் குறித்து விவரிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது சிகிச்சை பெற்ற சிறுவன் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் பத்திர திட்டம் என்றால் என்ன? எதற்காக எதிர்ப்பு? - முழு விவரம்!