நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் அணை, அருவிகள் போன்ற சுற்றுலாத் தளங்கள் அதிகளவு உள்ளன. அதில் மாவட்டத்தில் உள்ள பிரதான சுற்றுலா தலமான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி நாலு மூக்கு, உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தென் தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை கடுமையாக சேதமானது. இதனால் மாஞ்சோலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் கால வரையறையின்றி தடை விதித்திருந்தனர். சாலை மோசமானதால் பேருந்து சேவையும் முடங்கியது.
தொடர்ந்து சாலை தற்காலிகமாக சீரமைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று (பிப்.16) முதல் 4 சக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா அனுமதி வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, "முன்பு களக்காடு முண்டந்துறை துணை இயக்குனர் அலுவலகம் அல்லது வனச்சரக அலுவலகத்தில் மட்டுமே அனுமதி பெற்று செல்லக்கூடிய சூழல் இருந்தது. இந்நிலையில் தற்போது, மாஞ்சோலை செல்லும் வழியிலுள்ள மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் வழக்கம் போல் சமர்பிக்க கூடிய வாகன பதிவுச்சான்று நகல், வாகன காப்பீட்டு நகல், ஆதார் நகல் உள்ளிட்டவற்றை சமர்பித்து அனுமதி பெற்று மாஞ்சோலை செல்லலாம்.
நாள் ஒன்றுக்கு முதலில் வரும் 10 நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும், இருசக்கர வாகனம், வேன், திறந்தவெளி வாகனம் போன்றவற்றிக்கு அனுமதி இல்லை. காலை 8 மணி முதல் மாலை 5 மணிக்குள் மணிமுத்தாறு சோதனை சாவடியை கடந்து விட வேண்டும். தவறும் பட்சத்தில் வன விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு: கல்வி உளவியலாளர் கூறும் ஆலோசனை என்ன?