திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கண்டியப்பேரி பகுதியில் ஒரு வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மது விலக்கு தனிப்பிரிவு காவல் துறையினருக்கு நேற்று (டிசம்பர் 7) ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் கண்டியப்பேரி பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு ஒரு வீட்டில் வெளிமாநில மது பாட்டில்கள் பதுக்கி வைக்ககபட்டறிந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதில், சுமார் 1,108 குவாட்டர் பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த சாலமோன் தங்கராஜ் (32) என்பவரும், அவரது கூட்டாளிகள் 3 பேரும் சேர்ந்து மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, செண்பகம் பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டில்கள் இருந்தது தெரிய வந்த நிலையில் அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சாலமோன் தங்கராஜை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் அடிப்படையில் களக்காட்டைச் சேர்ந்த ஜான்சன் தங்கராஜ் (31), கங்கைகொண்டான் அருகே உள்ள துறையூரைச் சேர்ந்த திமுக மாவட்ட கவுன்சிலரும், திட்டக்குழு உறுப்பினருமான மகேஷ் குமார் (31) மற்றும் சந்துரு, மணிகண்டன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: போலி கணக்கு எழுதி லட்சக்கணக்கில் கையாடல் செய்த பெண் கணக்காளர்! சிக்கியது எப்படி?
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவாவில் இருந்து குறைந்த விலைக்கு 1200-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கி அங்கிருந்து கடத்தி வந்து நெல்லையில் உள்ள வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து, அவர்களிடம் எவ்வளவு நாட்களாக இதுபோன்று வெளிமாநில மது பாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர், கடத்தலில் ஈடுப்பட்டவர்கள் யார் யார்? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இது போன்று மது பாட்டுகளை பதுக்கி வைத்த விவகாரத்தில் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.