திருநெல்வேலி: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் ஏறத்தாழ 15 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் கடந்த ஒரு வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலின் காரணமாக வேட்பாளர் ராபர்ட் புரூஸ்சுக்கு சொந்தக் கட்சியிலேயே பல்வேறு எதிர்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தற்போது தமிழ்நாடு சிறுபான்மையின நல வாரிய தலைவராக இருக்கும் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, தற்போதைய நெல்லை நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் அவரது மகன் அசோக் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் திருநெல்வேலியில் போட்டியிட வாய்ப்பு கேட்டனர். இறுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களத்தில் இருக்கிறார்.
இதனால் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராபர்ட் புரூஸ் பிரச்சாரம் செல்லும் இடங்களில் பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் ஒதுங்கியே நிற்கின்றனர் என்று கூறப்படுகிறது. திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்பட கூட்டணி கட்சிகள் தான் அதிக அளவில் பிரச்சாரத்தில் பங்கேற்பதாகவும், குறிப்பாக கூட்டணியின் தலைமை கட்சியான திமுக, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக இதே திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வாய்ப்பு கேட்டனர். குறிப்பாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அவை தலைவர் கிரகாம்பெல், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உட்பட பல முன்னணி நிர்வாகிகள் திமுக தலைமையிடம் சீட் கேட்டு விண்ணப்பித்தனர்.
சீட்டு கேட்டவர்கள் அனைவரும் முக்கியமானவர்கள் என்பதால் பிரச்சினை வேண்டாம் என கருதி, திமுக திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ்சுக்கு ஒதுக்கியது. எனவே திமுக நிர்வாகிகளும் பலர் திருநெல்வேலி வேட்பாளர் மீது அதிருப்தியில் இருப்பதால் சரிவர தேர்தல் பணியில் ஈடுபடாமல் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தனது மகனுக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் இருப்பதாகவும், எனவே அவர் தேர்தல் பணியை கண்டு கொள்ளாமல் ஒதுங்கி நிற்பதாகவும் கூறப்பட்டது. மேலும், வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சபாநாயகர் அப்பாவுவை சந்திக்க சென்றபோது மூன்று மணி நேரம் அவரை சபாநாயகர் காக்க வைத்ததாகவும் சரிவர அவரை நடத்தவில்லை எனவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், நேற்று (ஏப்.3) பத்திரிகையாளர்களை சந்தித்த சபாநாயகர் திருநெல்வேலி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதாலோ, தனது மகனுக்கு சீட்டு கிடைக்காததாலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை. காங்கிரஸ் வேட்பாளரை நான் காக்க வைக்கவில்லை. பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர் என விளக்கம் அளித்து இருந்தார். இது போன்ற சூழ்நிலையில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
இந்தியா கூட்டணி இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணியாக கருதப்படுகிறது. அந்த கூட்டணி சார்பில் நீங்கள் போட்டியிடுகிறீர்கள் களத்தில் உங்களுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு பெரிய ஆதரவு இருக்கிறது. பிரச்சாரத்தில் எங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய அலை வீசுகிறது” என்றார்.
தற்போது திருநெல்வேலியில் உங்கள் கூட்டணியை சார்ந்த நாடாளுன்ற உறுப்பினர் இருக்கிறார். அவரது செயல்பாடு குறித்து பிரச்சாரத்தில் மக்கள் ஏதேனும் குறைகளை முன் வைக்கிறார்களா? என்ற கேள்விக்கு, “தற்போதைய திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினரும் களத்தில் இறங்கி எங்களுடன் வேலை பார்த்து வருகிறார்” என்றார்.
மக்களிடம் எந்த கோரிக்கையை பிரதானமாக முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறீர்கள்? என்ற செய்தியாளரின் கேள்விக்கு “நான் தொகுதியில் தங்கி இருந்து மக்களுக்காக பணியாற்றுவேன். திருநெல்வேலியை மையமாகக் கொண்டு ரயில்வே கோட்டம் உருவாக்குவேன். நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவை கொண்டு வருவேன். குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம் கொண்டு வருவேன் என்பது உட்பட முக்கிய கோரிக்கைகளை மக்களிடம் முன்வைத்து வருகிறேன்” என்றார்.
இந்த முறை திருநெல்வேலியில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. அதை எப்படி சமாளிக்க போகிறீர்கள்? என்ற கேள்விக்கு “நான்கு முனை போட்டி எங்களுக்கு தான் சாதகமாக அமையும் என்பதை பார்க்க முடிகிறது. அது வெளிப்படையாக தெரிகிறது” என்றார்.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உங்களை சந்திக்க மறுத்ததாகவும், உங்களை காக்க வைத்ததாகவும் தகவல்கள் வருகிறது. அது உண்மையா? என்ற நமது செய்தியாளரின் கேள்விக்கு, “இல்லை. அது தவறான செய்தி. ஒரே ஒரு பத்திரிகையில் மட்டும் அந்த செய்தியை வெளியிட்டுள்ளனர். சபாநாயகர் அப்பாவு எனது நல்ல நண்பர். சபாநாயகர் என்னை சந்தித்து பேசினார். காங்கிரஸ் கட்சிக்குள் எந்த கோஷ்டி பூசலும் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெருங்குடி டூ கடலூருக்கு ரயில் சேவை - தேர்தல் வாக்குறுதி அளித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்! - Lok Sabha Election 2024