திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயகள் கூட்டம் நேற்று ஜூன் 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் தலைமையில் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
அந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர், பெரும்படையார் மாவட்ட ஆட்சியரிடம், "மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 3 தலைமுறைக்கும் மேலாக வசித்து வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றக்கூடாது. அந்த பகுதியிலே அவர்கள் நிரந்தரமாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே இந்த மாஞ்சோலையை தனியாரிடம் இருந்து தமிழக தேயிலைத் தோட்ட கழகம் நேரடியாக எடுத்து நடத்த வேண்டும், எனக் கோரிக்கைகளை முன்பு வைத்தனர்.
அதனைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் பதில் கூறுகையில், "மாஞ்சோலை பகுதியில் வசித்து வரும் தொழிலாளர்கள் தற்போது தாங்களே முன்வந்துதான் விருப்ப ஒய்வு கொடுக்கிறார்கள். யாரையும் தற்போது வரை கட்டாயப்படுத்தவில்லை, யாராவது கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு கொடுத்திருந்தால் அவர்களை அழைத்து வாருங்கள், அவர்களின் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை ரத்து செய்கிறோம். மேலும் மாஞ்சோலையில் உள்ள மக்கள் தங்களுக்குத் தேவையான உதவிகளைக் கோரிக்கைகளாக வைத்துள்ளனர், அதனை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மாஞ்சோலை தேயிலை தோட்டமானது, 1919ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் என்ற தனியார் நிறிவனம் (BBTC) 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றுள்ளது. இந்நிலையில் இன்னும் 4 ஆண்டுகள் குத்தகை காலம் இருக்க இங்கு வேலை செய்பவர்களை 45 நாட்களுக்குள் அங்குள்ளவர்களை கட்டாயமாக வெளியேற்ற கையெழுத்து பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் ஆட்சியர் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க: வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பெண் அதிகாரி.. நெல்லையில் குழந்தை திருமணத்தை தடுப்பதில் முன்னெடுப்பு!