தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். இந்த நிலையில் 2ஆம் திருநாளான இன்று(பிப்.16) அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர் காலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் அதைத்தொடர்ந்து, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர் அதனை தொடர்ந்து, இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் வள்ளியம்பாள் இரண்டாம் மண்டக படிகாரர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சாமி சிங்கக் கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளினார். பின்னர், பரிவார மூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதனைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10 நாள் திருவிழாவான வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. தேரோட்டம் அன்று பக்தர்களின் வருகை சற்று அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் அதற்கான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தேசிய குவான்கிடோ சாம்பியன்ஷிப்: கோப்பைகளை அள்ளிய கோவை மாணவர்கள் - உற்சாக வரவேற்பு..!