வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் அறிவித்ததையடுத்து, இன்று (மார்ச் 21) குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், “பிரதமர் மோடி, நாங்கள் தியாகம் செய்யவில்லை என கூறுகிறார், நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். பலமுறை மிசாக்கு சிறை சென்றுள்ளோம். அப்படி சிறைக்குச் சென்ற போது, எனது மகன் எனது சட்டையைப் பிடித்து இழுத்து அழுது கொண்டிருந்தார். ஆனால், சிறையில் நான் குற்றவாளி எனக் கூறி என் மகனைப் பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள். இதையடுத்து, எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி, தியாகம் செய்துள்ளேன்” என நா தழுதழுக்க பேசினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வேலூரில் திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை அடிபட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இங்கே திமுக செல்வாக்குள்ள வேட்பாளர் நிற்பதால், அவரை ரெய்டு நடத்தி கைது செய்ய இருப்பாதாக மேல் இடத்திலிருந்து எனக்கு தகவல் வந்துள்ளது. ஆனால், அதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்”, என பேசியுள்ளார்.