செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி மஞ்சுளா (48). இவர் மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகில் கட்டண கழிப்பிடத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மஞ்சுளா தனது குடும்ப தேவைக்காக மாமல்லபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இன்று ரூ.55 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் கவரில் போட்டுக்கொண்டு வெளியே வந்தபோது அங்கு வாசலில் அமர்ந்திருந்த 3 வட மாநில பெண்கள் பிளாஸ்டிக் கவரை பிளேடால் கீறி அறுத்துவிட்டு ரூ.55 ஆயிரத்துடன் தப்ப முயன்றனர்.
அப்போது கையில் பணத்துடன் தப்பிக்க முயன்ற ஒரு பெண்ணை மஞ்சுளா துரத்தி பிடித்து நடுரோட்டிலேயே அப்பெண்ணுக்கு தர்ம அடி கொடுத்தார். இதனைப்பார்த்த பொதுமக்கள் ஆட்டோவில் தப்ப முயன்ற மற்ற 2 பெண்களையும் மடக்கி பிடித்தனர்.
இதையும் படிங்க : மீண்டும் அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி மைத்ரேயன்! திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம்? - BJP V Maitreyan Joins AIADMK
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் போலீசார் 3 பெண்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தியதில், 3 பேரும் மத்திய பிரதேசம் மாநிலம், ராஜ்புத் மாவட்டம், ஜான்டிகடை கிராமத்தைச் சேர்ந்த நிஷா(35), பூஜா(30), பிரவீனா(40) என தெரிய வந்தது.
ஒரே ஊரைச் சேர்ந்த 3 பெண்களும், அரசு பஸ்சில் பயணிக்கும் பெண்களிடம் நகை, பர்ஸ் பறிப்பது போன்ற குற்ற செயல்களில் பல்வேறு இடங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. பிறகு மஞ்சுளாவிடம் திருடிச் சென்ற ரூ.55 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் ஒப்படைத்தனர்.