தென்காசி: தென்காசியில் விவசாயப் பணிக்காக ஆட்களை ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 14 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆனைகுளத்திற்கு விவசாயப் பணிகளுக்காக லோடு ஆட்டோவில், இன்று காலை ஆட்களை ஏற்றிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், சுரண்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, சுரண்டை - வாடியூர் சாலையில் ஆட்டோ முன்பு நாய் ஒன்று குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிர்பாராதவிதமாக அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அதில், ஆட்டோவில் பயணித்த 14 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் ஜானகி, பிச்சையம்மாள், வள்ளியம்மாள் என்ற 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, விபத்து குறித்து தகவலறிந்து வந்த சுரண்டை போலீசார், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வீடு புகுந்து பாலியல் சீண்டல்.. கத்தி முனையில் மாமூல் வசூல்.. சென்னை க்ரைம் ஸ்டோரிஸ்