கோயம்புத்தூர்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும். அதன்படி, இன்று (மார்ச்.04) மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவர்களது மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு வந்த தம்பதிகள் இருவர் திடீரெனத் தற்கொலைக்கு முயன்றனர். அப்போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருவரையும் தடுத்து அவர்களைக் காப்பாற்றினார்.
இதனையடுத்து, தற்கொலைக்கு முயன்ற தம்பதியினர் யார்? என விசாரித்த போது, கோவை புலியகுளம் மாரியம்மன் கோயிலில் கணக்காளராகப் பணியாற்றி வந்த முருகேசன் என்பதும் அவரது மனைவி அனுராதா என்பதும் தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முருகேசன் பணியாற்றி வந்த கணக்காளர் பணியிடத்திற்கு, வேறு ஒருவரைச் செயல் அலுவலர் நியமித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் கோயில் நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்ட போது உரிய விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த தம்பதியினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் விசாரணைக்காகப் பந்தயச் சாலை காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தின் மறுபுறத்தில் திடீரெனத் தற்கொலைக்கு ஒருவர் முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் கோவை பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த நிவாஸன் என்பது தெரியவந்தது.
கரோனா காலகட்டத்தில் வாங்கிய சிறிய கடன் ஒன்று தற்போது வட்டியுடன் சேர்த்து இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் உயர்ந்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், தனது தந்தையின் பெயரில் உள்ள பூர்வீகச் சொத்தை விற்று அந்த கடனை அடைக்க முயன்றுள்ளார்.
இதற்கு, இவருடைய சகோதரர்கள் ஒத்துழைக்கவில்லை, எனக் குற்றம்சாட்டியவர். தன்னுடைய தந்தையின் பெயரில் உள்ள சொத்தை விற்க உதவிடுமாறு ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த நிலையில் இவ்வாறு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை விசாரணைக்காக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒரே நாளில் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு 3 பேர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050 இந்த தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: இறந்தவர்களை விமர்சனம் செய்யக்கூடாது என்ற பண்பாடு மோடிக்கு தெரியாதா? - நாஞ்சில் சம்பத் கேள்வி!