மதுரை: சமீபத்தில் ஆன்லைன் டிரேடிங் மூலமாக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 92 லட்சத்து 16 ஆயிரத்து 710 ரூபாய் பண மோசடி செய்ததாகவும், இழந்த பணத்தை மீட்டுத்தருமாறும் மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், குற்றம் சுமத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி இந்த வழக்கு விசாரணை குறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில், "குற்றச் சம்பவம் தொடர்பாக உடந்தையாக இருந்த நபர்கள் நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த நித்தீஷ்குமார், சந்திரசேகரன் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் சவுரியார்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது.
மேலும், நித்தீஷ்குமார் மூலமாக சைபர் குற்றவாளிகள் பொதுமக்களிடம் ஆன்லைன் பணமோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்ததும், இந்த வங்கி கணக்கு மூலம் ஒரு கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனைக்கு லட்சக்கணக்கில் பணம் கமிஷன் பெற்றதும் தெரியவந்தது.
இதனை அடுத்து, தனிப்படை போலீசார் நாமக்கல் மற்றும் கோயம்புத்தூர் சென்று குற்றம் சுமத்தப்பட்டவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 35 பவுன் தங்க நகை அபேஸ்.. மர்ம நபர்கள் சிசிடிவியில் சிக்காமல் போனது எப்படி?
மேலும், இவர்கள் ஆந்திரா, பீகார், குஜராத், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம், நாகாலாந்து, ஒடிசா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்களை ஆசைவார்த்தை கூறி ஆன்லைன் பணமோசடி செய்து ரூ.3 கோடி வரை பணம் பெற்று ஏமாற்றி கைவரிசை காட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இக்குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டவர்களை, கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் பாராட்டினார். மேலும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்
இதுமட்டும் அல்லாது, பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்