சென்னை: சென்னை மவுண்ட் ரோடு பள்ளிவாசல் பின்புறம் தனியார் கார் ஷோரூம் அருகே மெத்தம்பெட்டமைன் விற்பனை செய்வதாக சென்னை, வடக்கு கடற்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், துணை ஆணையரின் உத்தரவை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையில் போலீசார் மவுண்ட் ரோடு பள்ளிவாசல் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, மகேஷ் (30) மற்றும் பாரூக் (29) ஆகியோர் ஸ்விகி மற்றும் போர்ட்டர் ஆப் டெலிவரி ஊழியர்களை போல உடையணிந்து தடை செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை விற்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை டெலிவரி செய்வதற்கு முபஷீர் என்பவரிடம் இருந்து 500 ரூபாய் பெற்றுக்கொண்டு மெத்தம்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையும் படிங்க: "டார்ச் வெளிச்சத்தில் நடக்கும் இறுதி சடங்குகள்.. 1 கோடி ரூபாய் மதுரை மயானத்தில் மின் விளக்கு இல்லாத அவலம்!"
இந்நிலையில், முக்கிய நபரான முபாஷீரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள 12 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 27 போதை மாதிரிகளை பறிமுதல் செய்த பி1 வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அதேபோல, அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் இரு தினங்களுக்கு முன்பு இரவு, அரும்பாக்கம், திருவீதியம்மன் கோயில் தெருவில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த அபித்ராஜ் (29) ஸ்டாலின் ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அபித்ராஜிடம் இருந்து 4.46 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அபித்ராஜ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்