திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், புள்ளமங்கலத்தைச் சேர்ந்தவர் சுபாஷ்கரன். இவரது மனைவி பொற்செல்வி என்பவர், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்தவுடன், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 2020ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து விடுவிப்பு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, 2020 ஜூலை 22ஆம் தேதி அதே மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் தையல் பிரிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2021 ஏப்ரல் 24ஆம் தேதி அவர், தனது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதால், கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் ஆலோசனை பெற்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதைகள் கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு ஏற்படுவது போல் பரிசோதனையில் தெரிய வருவதாக கூறியதையடுத்து, பொற்செல்வி தனக்கு ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறித்து மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மருத்துவர் சிறிது காலம் கழித்து பரிசோதனைக்கு வருமாறு தெரிவித்ததால், மீண்டும் உடலில் உபாதை ஏற்பட்டதால், கடந்த 2021 ஜூலை 6ஆம் தேதி மருத்துவரைச் சந்தித்து ஸ்கேன் எடுத்த நிலையில், பொற்செல்வி கருவுற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த சூழலில், மீண்டும் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் 2021 ஜூலை 9ஆம் தேதி தொடர்பு கொண்டபோது, தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் செய்து, அதன் அறிக்கையை 2021 ஜூலை 13 அன்று மருத்துவரிடம் காண்பிக்க அவர்கள் பரிசோதனை அறிக்கை அடிப்படையில், கருவுற்ற குழந்தையின் வளர்ச்சி ஆனது 11 வாரம் ஆறு நாட்கள் உள்ளதாகவும், 2023 பிப்ரவரி 1ஆம் தேதி அன்று அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பொற்செல்வி, ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில்தான் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், மேலும் தனக்கு உடலில் ஏற்படும் உபாதைகள் குறித்து கேட்டபோது பரிசோதித்த மருத்துவர்கள், உயர் சிகிச்சை பெற அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி, 2021 ஜூலை 19 அன்று, உயர் சிகிச்சைக்காக திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கருவுற்றிருந்த கரு கலைந்து விட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று இரண்டாவது முறை குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, கடந்த 2023 ஜூலை 27 அன்று தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டி அவர் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று (மார்ச் 1) தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சேகர், உறுப்பினர் லட்சுமணன் அடங்கிய அமர்வு புகார்தாரருக்கு எதிர் மனுதாரர் மருத்துவ கவனமின்மையால் முறையற்ற அறுவை சிகிச்சை செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.
அதேபோல் வழக்கு செலவுத் தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இதனை ஒரு மாத காலத்திற்குள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி; திருச்சி பண்ணப்பட்டி ஒப்பந்ததாரருக்கு கிடைத்த நிலுவைத்தொகை!