சென்னை: பொன்முடி வழக்கில், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி, அன்சாரி போன்றவருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில், பொன்முடிக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
அந்த வகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து, பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் இன்று மாலை அறிவித்தது. இதனால், திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை அல்லது நாளை காலை மீண்டும் அவரை அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, மூன்று நாள் பயணமாக நாளை (மார்ச் 13) காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. அவர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. நாளை காலை 6.50 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், அவர் டெல்லி புறப்பட உள்ளார்.
டெல்லியில் இருந்து அவருக்கு வந்த அவசர அழைப்பின் பேரில், டெல்லி புறப்பட்டுச் செல்லும் ஆளுநருடன், அவருடைய செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியும் செல்கின்றனர். மூன்று நாள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, வரும் மார்ச் 16ஆம் தேதி, பகல் 12.40 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
பொன்முடி மீண்டும் அமைச்சரானால், அதற்கான உத்தரவில் ஆளுநர் கையெழுத்திட்டு, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இது போன்ற நிலை உள்ளதால், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய அரசு அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் ஆகியோரிடம் இது குறித்து ஆலோசனை கேட்பதற்காக ஆளுநர் டெல்லி செல்வதாக கூறப்படுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் அதே விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும் டெல்லி செல்கிறார். இதை அடுத்து ஆளுநர் ரவியின் இந்த திடீர் டெல்லி பயணம், தமிழகத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார்.. அமைச்சராக பதவியேற்கவும் ஆளுநருக்கு கடிதம்!