மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நிம்மேலி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் இரவு நேரத்தில் மது போதையில் சுற்றிவரும் இளைஞர்கள் சிலர், அங்குள்ள டீக்கடை, சாலையில் உள்ள ஸ்டால்களை ஆகிறவற்றை சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த தெரு விளக்குகளை கற்களால் தாக்கி உடைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சக்திவேல் (43) என்பவரை வழிமறித்த இளைஞர்கள் அவரை தாக்க முயன்றுள்ளனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், அங்குள்ள பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் போதை ஆசாமிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சீர்காழி - வடரங்கம் செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.
இதனையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் சீர்காழி - வடரங்கம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சீர்காழி போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மது போதையில் கடைகளை சேதப்படுத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது நிம்மேலி பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (19), கமல்ராஜ் (19) மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சாலையில் நடந்து சென்ற சிறுமியை கடிக்க பாய்ந்த நாய்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி!