தூத்துக்குடி: நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் நடைபெற்ற நீட் தேர்வை லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதினர். அதில், தூத்துக்குடியில் உள்ள அழகர் பள்ளி மற்றும் கமலாவதி பள்ளியில் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் பலருக்கு மிகக் கடினமான MNOP வரிசை எண் கொண்ட வினாத்தாள் மாறுபட்டு இருந்தாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின்னர், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேசிய தேர்வு முகமை ஆகியவை உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும், தாங்கள் எழுதிய வினாத்தாள்களுக்கும் உரிய மதிப்பெண் வழங்கி, தனி கட் ஆஃப் மற்றும் கவுன்சிலிங் உள்ளிட்டவற்றை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் விக்னேஷ் சுப்பிரமணியன் கூறியதாவது, "தூத்துக்குடியில் உள்ள இரண்டு பள்ளிகளில் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் முற்றிலுமாக மாறுபட்ட வினாத்தாள் (MNOP) வழக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்ற தேர்வு மையங்களில் கொடுக்கப்பட்ட வினாத்தாளை விட எங்களுக்கு கொடுத்த வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்தது. இதனால் எங்களுக்கு தேர்வு எழுத மிகவும் நேரவிரயம் ஆனது. மிகுந்த முயற்சி செய்தும், தற்போது இந்த நிலை உருவாகியுள்ளது எங்கள் மருத்துவ கனவுகளைக் கேள்விக் குறியாக்கிவிட்டது" என வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மாணவி கெரன், "தூத்துக்குடியில் உள்ள அழகர் மற்றும் கமலாவதி ஆகிய பள்ளிகளில் எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள், மற்ற தேர்வு மையங்களில் வழங்கிய வினாத்தாளை விட மிகவும் கடினமாக இருந்தது. நாடு முழுவதும் நீட் தேர்வு குறித்து பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
ஆனால், எங்களுக்கு நடந்ததை குறித்து யாருக்கும் தெரியவில்லை. இந்த விவகாரத்திலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் கடினமான வினாத்தாளுக்கு பதிலளித்த எங்களுக்கு தனி கட் ஆஃப் மற்றும் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: "நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து வெளிப்படையான விசாரணை" - சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்!