தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் நவமுதலூர் தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (84). இவருக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், இவர் கடந்த ஜூலை 22ஆம் தேதி வேளாங்கண்ணிக்குச் செல்வதாக கூறி முதலூரில் உள்ள மகள் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அதன்பின் வெகுநாட்களாக அவர் வீடு திரும்பவில்லை, வயதானவர் தடுமாறி வேறு பகுதிக்குச் சென்றுவிட்டாரா என தெரியவில்லை என்று அவரது பேரன் அண்டோ அருண் ரஞ்சித் தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் அனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், சாத்தான்குளம் கரையடி சுவாமி திருக்கோவில் எதிரே உள்ள காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் இறந்து 10 நாட்களுக்கு மேல் ஆன பேண்ட், சட்டை அணிந்து இருந்த நபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ஏசு.ராஜசேகரன் தலைமையிலான போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவர் பிரான்சிஸ் என்பது தெரிய வந்துள்ளது. இவர் வேளாங்கண்ணிக்குச் செல்வதாக கூறி இந்த காட்டுப்பகுதிக்கு எப்படி வந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நடுவானில் பயணிக்கு நெஞ்சுவலி! பறிபோன முதியவர் உயிர்!