தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், மீண்டும் களம் காணும் திமுக வேட்பாளர் கனிமொழி நேற்று (மார்ச் 31) கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிட்பட்ட லிங்கம்பட்டி, பூசாரிபட்டி, தாமஸ் நகர் மணி கூண்டு, டக்கு திட்டங்குளம், முத்துநகர், மந்திதோப்பு, ஊத்துப்பட்டி, இடைச்செவல், இனாம் மணியாச்சி ஆகிய இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.
பிரச்சாரத்தின் போது கனிமொழி பேசுகையில், தமிழ்நாடு அரசின் சாதனைகளான, அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேரும் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் சிறப்புகள், மாணவிகள் மட்டுமல்லாது மாணவர்களுக்கும் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் புதல்வர்கள் திட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
காலையில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் பொழுது பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் மூலம் ஏராளமான பணிக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார்.
பின்னர், ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் நிதியாக அளிக்கும் பொழுது நமக்கு 25 பைசா மட்டுமே நிதி பகிர்வாக அளித்து வருகிறது, ஆனால் ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் இரண்டு ரூபாய் என இரட்டிப்பு நிதி பகிர்வு அளித்து, தமிழ்நாட்டை ஓரா வஞ்சனை செய்கிறது என சுட்டிக் காட்டினார்.
தமிழ் மொழியையும் தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தும் வகையில், பேசி வரும் பாஜகவினர். குறிப்பாக, இந்தி மொழி எதிர்ப்பிற்காக பலதரப்பட்ட போராட்டங்களை ஈடுபடுத்தி உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் போராட்டத்தை அருந்த செருப்பு எனக் கொச்சைப் படுத்தினார் அண்ணாமலை.
தமிழ்நாட்டிற்குப் புயல் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட பொழுது நிதி கேட்டதற்கு ஒன்றியத்தில் தற்போது உள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏன் பிச்சை கேட்கின்றனர் என்று இழிவுபடுத்தியதையும், முன்னாள் நடிகையும், தற்போது பாஜகவில் உள்ள ஒருவர், தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை பிச்சையெனக் கூறியுள்ளனர் என்று சாடினார்.
மோடிக்குத் தமிழ் தெரியவில்லை என்று வருத்தமாக உள்ளதாம், தமிழ் மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் தமிழ்நாட்டில் பிறந்திருக்க வேண்டுமாம், பின் ஏன் இந்தி மொழியை நம் மீது திணிக்கப் பார்க்கிறார்கள். இப்போது கூட ஒரு பிரச்சனையும் இல்லை ஒரு நல்ல ஆசிரியரை அனுப்புகிறோம் தமிழ் கற்றுக் கொள்ளட்டும் மோடி.
பாஜகவும் - அதிமுகவும் பிரிந்துவிட்டதாக கூறுவது நாடகமானது, தேர்தல் முடிந்த பிறகு அதிமுக பாஜகவை ஏற்றுக் கொள்ளும், தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் எடப்பாடி, எங்காவது பாஜகவைப் பற்றியோ, மோடியை பற்றியோ வாய் திறந்தாரா. அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான். ஒன்றியத்தில் மக்களுக்கான ஒரு ஆட்சி அமைய வேண்டும், மதத்தால், சாதியால் பிரிவினையை ஏற்படுத்தி வரும் இவர்களை விரட்டி அடிக்க வேண்டும், 40-ம் நமதே நாடும் நமதே என்று கூறி, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தனக்கு வெற்றியைப் பெற்றுத் தர வேண்டுமெனத் தெரிவித்தார்.