தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ். கூலித்தொழில் செய்துவரும் இவருக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளனர். இதில், 2017ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தை, பிறக்கும் போதே வலது கையில் உள்ள இரண்டு விரல்கள் ஒட்டி பிறந்துள்ளார்.
மேலும், இதனால் விரலில் அசைவு மற்றும் செயல்திறன் குறைவாகவும், மற்ற குழந்தைகளைப் போல சாப்பிட, விளையாட, எழுத முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அதன் பின்னர், கடந்த 2022ஆம் ஆண்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஒட்டுறுப்பு சிகிச்சை துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் ராஜ்குமார், அருணாதேவி, பிரபாகர் மற்றும் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழு, அதே ஆண்டு ஜூலை 7ஆம் தேதி 5 வயது நிரம்பி இருந்த சிறுமிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தற்போது அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட விரல்கள் நன்றாக செயல்படுவதாகவும், மேலும் மற்ற குழந்தைக்கு இருப்பது போல் தங்களுக்கு விரல்கள் உள்ளதைக் கண்டு குழந்தை மற்றும் குழந்தையின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஒட்டுறுப்பு துறை மருத்துவர் ராஜ்குமார் கூறுகையில், “சிறுமிக்கு பிறக்கும் போதே 3, 4 விரல்கள் (மோதிர விரல் மற்றும் நடுவிரல்) சேர்ந்திருந்தது. இதனால் அக்குழந்தைக்கு கையில் வலி ஏற்பட்டது. அப்போது, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இரண்டு விரல்களையும் பிரித்து சரி செய்துள்ளோம். மேலும், 4 ஆயிரம் முதல் 5 ஆயிரத்தில் ஒரு குழந்தை இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளாகின்றனர்" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, குழந்தையின் தந்தை சுரேஷ் கூறுகையில், "எனது மகள் பிறக்கும் போதே கை விரல்கள் ஒட்டி பிறந்தார். இதனால் விரலில் அசைவு குறைந்து, மற்ற குழந்தைகளைப் போல் சாப்பிட இயலாமலும், விளையாட, எழுத முடியாமலும் இருந்தார். பின்னர், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். முதலமைச்சர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் இலவசமாக சரி செய்யப்பட்டது. தற்போது குழந்தையின் விரல் இயல்பாக செயல்படுகிறது" என்று மகிழ்வுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்!