தூத்துக்குடி: பூச்சிக்கொல்லி மருந்து பரிசோதனை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் இரசாயனங்கள் கண்மாயில் கலப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் இரசாயனங்கள் கண்மாயில் கலப்பதை நிறுத்த போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பூச்சிக்கொல்லி மருந்து பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே 15 மாவட்டங்களில் மட்டுமே இப்பூச்சி கொல்லி மருந்து பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களில் மதுரை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, வேலாயுதபுரம் பரிசோதனை நிலையம் உட்பட 3 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் இப்பரிசோதனை நிலையத்திற்கு, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பரிசோதனை ஆராய்ச்சிக்காகக் கொண்டு வருகின்றனர்.
இங்கு ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் இரசாயனங்களை நேரடியாக நீரோடை வழியாக அருகில் உள்ள நெடுங்குளம் கண்மாயில் கலக்க விடுவதால் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளர்ப்போர் பெரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். வேலாயுதபுரம் நெடுங்குளம் கண்மாயில் தேக்கி வைக்கும் நீரைக் கொண்டு ஆவல் நத்தம், இலுப்பையூரணி, மூப்பன்பட்டி, தோட்டிலோவன்பட்டி, கஞ்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களுக்குப் பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: விருதுநகர் வச்சக்காரப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பேர் பலி!
ஏற்கனவே கண்மாயை ஆக்கிரமித்து உள்ள அமலைச் செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது பூச்சிக்கொல்லி மருந்து பரிசோதனை நிலைய இரசாயன மருந்துகளும் கலந்து வருவதால், மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.
இது குறித்து வேளாண்மை அலுவலர் கீதாவிடம் அப்பகுதி விவசாயிகள் பலமுறை முறையிட்டும் அதற்கான எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசு நேரில் ஆய்வு செய்து மெத்தனப்போக்காகச் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க: பழனியில் புதிய மின் இழுவை ரயிலைத் துவக்கி வைத்த அமைச்சர்; பக்தர்கள் மகிழ்ச்சி!