தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன்னுடைய மகனுக்காக ஆன்லைனில் வேலை தேடிவந்துள்ளார். இதனை அறிந்த மர்மநபர் ஒருவர், முதியவரைத் தொடர்பு கொண்டு, தனது பெயர் மோகன்ராஜ் என்று கூறி அறிமுகமாகியுள்ளார்.
பின்னர் தொடர்ந்து பேசிய மர்ம நபர், முதியவரின் மகனுக்கு பொதுப்பணித்துறையில் (PWD) ஓட்டுநர் வேலை வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய முதியவர் மோகன்ராஜ் எனப் பேசிய அந்த மர்மநபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு, பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 21 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்டு மர்ம நபர் போனை சுவிட்ச் செய்துவிட்டது தெரியவந்தது. இதன் பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த முதியவர் சைபர் க்ரைம் அதிகாரப்பூர்வ தளமான என்சிஆர்பில் (National Cyber crime Reporting Portal) ஆன்லைனில் புகார் பதிவு செய்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி, சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான போலீசார் குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தொழில்நுட்ப ரீதியாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மதுரை கே.கே.நகர் சுப்பையா காலணியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பிச்சைக்கண்ணு (43) என்பவர் முதியவரிடம் மோகன்ராஜ் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் மதுரை வக்போர்டு கல்லூரி அருகே வைத்து பிச்சைக்கண்ணு என்பவரைக் கைது செய்த போலீசார், அவரை தூத்துக்குடி அழைத்து வந்தனர். பின்னர் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி, பேரூரணி சிறையிலடைத்தனர். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!