தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 22) மாலை திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, இந்தியா கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனிமொழி எம்பி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “நான் நாளிதழில் விளம்பரம் போடும் போது, அதில் தவறுதலாக சீன ராக்கெட்டின் படம் இடம் பெற்றிருந்தது. ஆனால், பாரத பிரதமர் மோடி சீன நாட்டு பிரதமருடன் மகாபலிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேஷ்டி சட்டையுடன் சுற்றுலாவாக பயணித்தார்.
மேலும், பாரதப் பிரதமர் மோடி, காமராஜரைப் பற்றி புகழாரம் பாடினார். ஆனால், காமராஜர் டெல்லியில் இருந்த போது காமராஜரைக் கொல்ல முயற்சி செய்தனர். காமராஜரைப் பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது? வரும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழியை எதிர்த்து நிற்கும் அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்” என அவர் கட்சி நிர்வாகிகளிடம் பரபரப்பாக பேசினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் சார்பில், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பாரத பிரதமர் நரேந்திர மோடியை ஒருமையில் அருவருக்கத்தக்க இழிவான, அசிங்கமான சொற்களால் விமர்சித்தது, தங்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கர்மவீரர் காமராஜர் என்று புகழாரம் சூட்டி கூட்டத்தில் பெருமிதம் கொண்டார். ஆனால், அதை விமர்சித்து தண்டுப்பத்து கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், அவ்வாறு காமராஜரைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை என்று மோசமாக விமர்சித்துள்ளார்.
அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ளவரே, இதுபோன்ற நான்காம் தர வார்த்தைகளைப் பயன்படுத்துவது திமுகவுக்கு ஒருபோதும் புகழைத் தேடித் தராது. ஆகையால், இதுபோன்ற வார்த்தைகளால் எதிர்கட்சியினரை விமர்சிப்பது தேர்தல் விதிமுறைகளின் படி குற்றமும் ஆகும். இதுபோன்று செயல்களில் ஈடுபடும் அமைச்சர் மற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? - Viluppuram Lok Sabha Constituency