தூத்துக்குடி: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவுப்படி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பெங்களூருவில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சாலையில் நின்று, அதற்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த கார் ஒன்றில் சில பொருட்களை பேருந்தில் இருந்து காருக்குள் மாற்றிக் கொண்டிருந்துள்ளனர்.
இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார், பேருந்து ஓட்டிநரை கீழே இறங்க சொல்லி அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார். அதில் பேருந்தை இயக்கி வந்தது திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த பாலசுந்தர் (42) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த காரில் வந்த நபர்களான திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த முத்தார செல்வன் (22), பேச்சியப்பன் (35), பீர்முகமது (32), ஆகியோர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: திருமணமான பெண்ணுக்கு காதல் தொல்லை.. சென்னையில் ஜிம் பயிற்சியாளர் கைது!
போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவர்கள் வந்த வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்தனர். அந்த சோதனையை தொடர்ந்து நான்கு பேரையையும் போலீசார் புதியம்புத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பேருந்தை இயக்கி வந்த பாலசுந்தர் தமிழக அரசால் தடைச்செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பேருந்தில் கடத்தி வந்துள்ளார். பின் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டிருப்பதை அறிந்து அவற்றை காருக்கு மாற்றிக் கொண்டிருக்கும்போது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 40 ஆயிரம் மதிப்புள்ள தடைச்செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.