சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 38-டை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்திற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அரசு மற்றும் அரசு அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோரின் அலட்சியப்போக்கும், சட்ட நடவடிக்கைகளில் தீர்க்கமின்மையும்தான் இதற்கு முக்கியக் காரணம் எனவும் அரசியல் கட்சியினர் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கட்சியான திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ்(X) வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில் தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தி சென்னையில் வரும் 24-ஆம் தேதி மாலை 3.00 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்". என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சிக்கு விரைந்த விஜய்... பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்! - vijay in kallakurichi