திருநெல்வேலி: பனங்காட்டு படை கட்சியின் நிறுவன தலைவரான ராக்கெட் ராஜா, இரண்டு கொலை வழக்கு மற்றும் பேருந்து எரித்த வழக்கு சம்பந்தமாக நெல்லை நீதிமன்றத்திற்கு கடந்த 16ஆம் தேதி ஆஜராக வந்திருந்தார். இதற்காக அவரது சொந்த ஊரான திசையன்விளை அருகே உள்ள ஆணைகுடி பகுதியில் இருந்து நெல்லை நீதிமன்றத்திற்கு வந்தார்.
அப்போது, திசையன்விளை காவல்துறையினர் அவருக்கு நெல்லை காவல் மாவட்ட எல்கை வரையில் பாதுகாப்பு அளித்தனர். அந்த வாகனத்தில் திசையன்விளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி நெல்லை நீதிமன்ற அலுவல் வேலைக்காக அதே பாதுகாப்பு வாகனத்தில் ஏறி வந்துள்ளார்.
பின்னர், மாநகர எல்லைக்குள் வந்தவுடன் திசையன்விளை காவல்துறையினர் தங்களது பாதுகாப்பை, நெல்லை மாநகர காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் ராக்கெட் ராஜாவுக்கு பாதுகாப்பு அளித்து நெல்லை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் நீதிமன்ற அலுவலக பணிக்காக வந்த திசையன்விளை காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, மாநகர பாதுகாப்பு காவல் வாகனத்தில் ஏறாமல், கொலை மற்றும் பேருந்து எரிப்பு வழக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜரான ராக்கெட் ராஜா வாகனத்தில் ஏறிச் சென்ற வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது.
அதனை அடுத்து, காவல்துறை அதிகாரியின் இந்த போக்கிற்கு எதிராக எழுந்த பல்வேறு தரப்பில் புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், திசையன்விளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!