திருநெல்வேலி: உலக பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தைக் காண ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இது போன்ற நிலையில் தான் 518வது ஆனித் தேரோட்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில், யாரும் எதிர்பாராத விதமாக தேரோட்டம் தொடங்கிய சில வினாடிகளிலேயே தேரில் கட்டப்பட்டிருந்த ராட்சத வடம் அறுந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் உள்பட சிறப்பு விருந்தினர்கள் காலை 7.18 மணியளவில் தேரின் வடத்தை பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், தேரின் வடம் அடுத்தடுத்து அறுந்து விழுந்ததில் இரவு 10.15 மணியளவில் தேர் நான்கு ரத வீதிகளையும் கடந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
ஆரம்பத்தில் அடுத்தடுத்து வடம் அறுந்ததை கண்ட பக்தர்கள் அதை பெரும் அபசகுணமாக கருதினர். குறிப்பாக, தேர் இழுப்பதற்கு முன்பே வடம் அறுந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஒருபுறம் தேரோட்டத்தில் பங்கு பெற்ற இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன், கோயில் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என கடுமையாக குற்றம் சாட்டினார். மேலும் இது மிகப்பெரிய அபசகுணம் என்று அவர் ஆவேசமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சட்டப்பேரவை வரை சென்ற பிரச்சனை: திருநெல்வேலி தேர் திருவிழா தமிழக அளவில் பேசும் பொருளானது. குறிப்பாக, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் இது குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தேருக்குப் பின்னால் தடி வைப்பதற்கு முன்னாடியே பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை இழுத்ததால் தான் கயிறு அறுந்து விட்டதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்து இருந்தார்.
இது போன்ற நிலையில் வடம் அறுந்ததற்கான காரணம் என்ன? இச்சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்வதற்காக இந்து அறநிலையத்துறையின் நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினியை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் தொலைப்பேசியில் பிரத்யேகமாக தொடர்பு கொண்டோம். அவர் நம்மிடம் கூறியதாவது, “அறுந்த கயிற்றின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது. உண்மையாகவே கயிறு தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் அளவிற்கு உறுதியாக இருந்ததா என்பதை பரிசோதிக்க உத்தரவிட்டுள்ளோம். தேவைப்பட்டால் லேப் டெஸ்ட்க்கு அனுப்பவும். மேலும், இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தடி வைப்பதற்கு முன்பே பக்தர்கள் தேரை இழுத்ததால் தான் கயிறு அறுந்து விட்டதாக தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும் அதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேரோட்டத்துக்கு முன்பே கயிரை பரிசோதனை செய்து தரமாக இருக்கிறது என்று தான் அறிக்கை கொடுத்திருந்தனர். முதல்முறை மூன்று வடம் அறுந்தது, பின்னர் இரண்டு மாற்று வடத்தை வைத்தும் சங்கிலி கட்டியும் தேரை இழுத்தோம். பொதுவாக, தடி வைக்கும் போது பின்னால் கயிறு அறுந்து விழும். பிறகு மீண்டும் கயிறை கட்டி இழுப்பார்கள்.
எனவே ஒரு முறை தான் கயிறு அறுந்தது. இரும்புச் சங்கிலியால் தேரை இழுப்பது இங்கு மட்டும் புதிது அல்ல ஏற்கனவே திருவண்ணாமலை கோயிலில் கூட தேரை இழுக்க இரும்புச் சங்கிலி பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, பெரும்பாலான கோயில்களில் மனிதர்களைக் கொண்டு தடி வைப்பதற்கு பதிலாக ஜேசிபி போன்ற இயந்திரத்தை வைத்து பின்னால் சக்கரத்தை தள்ளிவிட்டு தான் தேரை இழுக்கிறார்கள். ஆனால் நெல்லையப்பர் கோயில் மட்டும் தான் முழுக்க முழுக்க மனிதர்களை வைத்து தடி வைக்கப்படுகிறது.
கயிறு மோசமாக இருந்ததா என்பது குறித்து விசாரணைக்கு பிறகு தெரியவந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்பாராதமாக நடந்து விட்டது. அதே சமயம் தவறு நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மாற்று ஏற்பாடாக ஏற்கனவே இரண்டு வடம் தயாராக வைத்திருந்தோம். பின்னர் மீண்டும் திருச்செந்தூரில் இருந்து வடம் உடனடியாக கொண்டு வரப்பட்டது. பின்னாடி தடியை தட்டும் போது கயிறு அறுப்பது எல்லா கோயில்களிலும் நடக்கும் விஷயம் தான். நெல்லையப்பர் கோயில் தேர் 450 டன் எடை கொண்டது.
தேருக்கான செலவு?: இந்த ஆண்டு செலவை பொருத்தவரை, சுவாமி உலா வரும் வாகனங்கள் மட்டுமே 17.50 லட்சம் ரூபாய்க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய கயிறு வாங்க வேண்டும் என்றால் ஆர்டர் கொடுத்து தான் வாங்க வேண்டும். ஆர்டர் கொடுத்தால் தயார் செய்து வர 5 மாதங்கள் ஆகும். எனவே இந்த ஆண்டை பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்த ஆண்டு கூடுதலாக புதிய வடம் ஆர்டர் கொடுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படும். மேலும் தேருக்கு தேவையான அனைத்து பொருட்களையும் புதிதாக வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் பிரத்யேகமாக தொடர்பு கொண்ட போது, இந்த விவகாரம் குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுப்பணித்துறை தவறு செய்தார்களா அல்லது வேறு ஏதும் தவறா என்பதை அவர்கள் முழுமையாக விசாரிப்பார்கள்" என்று தெரிவித்தார்.