கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 97 வார்டுகளை கைப்பற்றியன. அதிமுக வெறும் 3 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பரிந்துரையின் பேரில் 19வது வார்டு உறுப்பினர் கல்பனா ஆனந்த் குமாரை திமுக தலைமை மேயராக வெற்றி பெற செய்ய வைத்தது.
மேயராக பொறுப்பேற்றதில் இருந்து கல்பனா மீது, அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு முன்னும், பின்னும் திமுக மாமன்ற உறுப்பினர்களை மதிக்காமல் செயல்பட்டது, மாநகராட்சி மண்டல தலைவர்களுடன் இணக்கமாக இல்லாமல் மோதல் போக்குடன் செயல்பட்டது, நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முறையாக வேலை பார்க்காமல் இருந்தது உள்ளிட்ட தொடர் புகார்கள் எழுந்தன.
மேலும் அமைச்சர் கே.என்.நேருவுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்த நிலையில் கட்சி தலைமை அவரை மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தனிப்பட்ட காரணத்திற்காகவும், உடல் நலத்தை கருத்தில் கொண்டும் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக அண்மையில் அவர் தெரிவித்திருந்தார்.
இதனால் கோயம்புத்தூர் மாநகராட்சியின் அடுத்த மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்த நிலையில், கோயம்புத்தூர் பொறுப்பு அமைச்சராக முத்துசாமி பரிந்துரைக்கும் நபருக்கு தான் மேயர் பதவி கிடைக்கும் என்றும், மூத்த அமைச்சர் கே.என்.நேரு பரிந்துரைக்கும் நபர் தான் மேயர் எனவும் பல்வேறு ஊகங்கள் எழுந்தன.
ஏற்கனவே, மேயராக இருந்தவர் கவுண்டர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதால் அதே சமுதாயத்தை சார்ந்தவர் தான் மேயராக வரவேண்டும் எனவும், நாயுடு அதிகமாக உள்ளதால் அந்த சமுதாயத்தைச் சார்ந்தவர் வர வேண்டும் என இரு வேறு கருத்துகள் நிலவி வந்ததாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து மேயர் பதவியை நிரப்ப மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சியின் கூட்டத்தை நடத்தி மேயரை தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை (ஆக 6) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
அதன்படி கோயம்புத்தூர் காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், கணபதி பகுதியைச் சேர்ந்த 29வது வார்டு கவுன்சிலராக உள்ள ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். கவுண்டர் சமுதாயத்தை சார்ந்த ரங்கநாயகி கோவை எம்பி ராஜ்குமாரால் பரிந்துரை செய்யப்பட்டவர் என கூறப்படுகிறது.
காரணம், நாடாளுமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான ராஜ்குமார் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் பரிந்துரை செய்த நபரே மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் சிறையில் இருந்தாலும், கோயம்புத்தூரில் செந்தில் பாலாஜியின் கை ஓங்கியுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள ரங்கநாயகி பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும், அவரது கணவர் ராமசந்திரன் 29வது வார்டு செயலாளராக உள்ள நிலையில் தலைமைக்கு கட்டுப்படும் நபர் தான் மேயராக வேண்டும்.
அதேசமயம் சிறையில் இருந்தாலும், செந்தில் பாலாஜியின் குரல் கோயம்புத்தூரில் இருக்க வேண்டும். சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்துவிட்டால் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் செந்தில் பாலாஜியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்பதற்காக இவரை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோயம்புத்தூர் மேயர் வேட்பாளராக ரங்கநாயகியை முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், கவுன்சிலர்கள் யாரையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யவில்லை. முறைப்படி வேட்பு மனுத்தாக்கல் செய்து தேர்தல் நடைபெறும். யாரையும் துணி எல்லாம் எடுத்து வர சொல்லவில்லை" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? - முதல்வர் ஸ்டாலின் கொடுத்த 'நச்' பதில்! - Udhayanidhi Stalin deputy cm issue