சென்னை : "உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது தொடர்பான உங்களின் கருத்து என்ன?" கடந்த செப்டம்பர் 21ம் தேதி மூத்த அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனிடம் வேலூரில் செய்தியாளர் எழுப்பிய கேள்வி இது. இதற்கு பதிலளிக்க மறுத்த அவர் "இந்த கேள்வி மட்டும் தான் கேட்பீர்கள் என தெரியும்" என முகத்தில் அதிருப்தியுடன் செய்தியாளர் சந்திப்பிலிருந்து எழுந்து வெளியேறினார்.
மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது : இதே போன்ற மற்றொரு முரணாக இதுநாள் வரையிலும் கேள்வியை நாசூக்காக தள்ளி வந்த முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது நெற்றிப்பொட்டில் அடித்தாற்போன்று பதில் கொடுத்துள்ளார். சென்னை கொளத்தூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று பதில் அளித்துள்ளார்.
இதன் மூலம் தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பது உறுதியாகி உள்ளது. அதேபோல் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் அந்த கோரிக்கை ஏமாற்றம் அளிக்காது என்ற வகையிலும், முதலமைச்சரின் இன்றைய செய்தியாளர் சந்திப்பு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கட்சி நிர்வாகிகள் என பலரும் உதயநிதி துணை முதலமைச்சராவார் என ஆரூடம் கூறி வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் போன்றோர் தேதியை குறிப்பிட்டு கூட முதலமைச்சராவதற்கான வாய்ப்புகளை சுட்டிக்காட்டினர். ஆனால் இவர்களில் விதிவிலக்காக துரைமுருகன் இந்த கேள்வியை தவிர்த்திருந்தார்.
திமுகவின் தற்போதைய அமைச்சர்களில் மிகவும் மூத்தவரான துரைமுருகன், தனக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என விரும்புவதாகவும் இவர் தான் உதயநிதிக்கு பதவி கொடுப்பதில் முட்டுக்கட்டை போடுவதாகவும் கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா சுற்றுப்பயணம் புறப்பட்ட நிலையில், இதற்கு முன்பாக துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அப்போதும் ஜூலை 21ம் தேதி துணை முதலமைச்சர் பதவியைக் கொடுத்தால் நீங்கள் ஏற்பீர்களா என இதே வேலூரில் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "துணை முதலமைச்சர் பதவியை கொடுத்தால் யார் வேண்டாம் என்று சொல்வார்கள். இது எல்லாரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. கூட்டு முயற்சியால் எடுக்கப்பட வேண்டிய விஷயம்" எனத் தெரிவித்தார்.
அந்த காலகட்டத்தில் மு.க.ஸ்டாலினும் துணை முதலமைச்சர் கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை எனக்கூறி விவகாரத்தை தள்ளிப் போட்டார். அமெரிக்க பயணத்திற்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் ஒன்றே மாறாதது என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது முதலமைச்சர் அளித்திருக்கும் பதில் திமுக தொண்டர்களையும், உதயநிதி துணை முதலமைச்சராகும் ஆதரவு நிலைப்பாட்டோடு இருப்பவர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் : தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஏற்க 17 நாள் அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திமுகவின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடைபெற்றது. அவ்வாறு நடைபெற்ற கூட்டங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
அமைச்சர்கள் கருத்தும், உதயநிதி மறுப்பும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என ஏற்கனவே அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதனை மறுத்து பேசி இருந்தார். மேலும், ஊடகங்களில் வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. அதனை நம்ப வேண்டாம் எனவும் பேசி இருந்தார்.
அமைச்சர்கள் மீண்டும் கருத்து : அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்து தமிழகம் திரும்பிய நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்னும் 10 தினங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்பார் என பேசினார். இதேபோல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன் முடியும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்ற பின் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, இதுவரை மூன்று முறை அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது.