சென்னை: இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். இந்த விழா நாடு முழுவதும் கொண்டாடப்படும். பொது இடங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழாவானது வரும் செப் 7ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்றது.
இதற்கான ஏற்பாடுகள் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் கோயில்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளன. மேலும், விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், சென்னையின் முக்கிய பகுதியான புரசைவாக்கத்திலுள்ள கொசப்பேட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டும், வெவ்வேறு பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் வருகிறது.
மேலும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்காக விநாயகர் சிலைகளை மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி வரும் போது அப்போதைய டிரெண்டிங்கிற்கு ஏற்றார் போல பாகுபலி, கேஜிஎஃப் உருவத்தின் வடிவில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்படும். அது போல இந்த வருடம் ஐந்து தலை நாகம் விநாயகர் சிலை மற்றும் கலை மான் தேர் விநாயகர் சிலை, நான்கு வாகன மாடு வடிவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிலை வியாபாரி வெங்கடேசன் கூறுகையில், "இந்த வருடம் ஐந்து தலை நாகம் விநாயகர் சிலை மற்றும் கலை மான் தேர் விநாயகர் சிலை, நான்கு வாகன மாடு விநாயகர் சிலை ஆகிய சிலைகள் வந்துள்ளன. கடந்த வருடத்தை போல இந்த வருடம் தனித்துவமாக எந்த சிலையும் வரவில்லை. இந்த வருடம் வியாபாரம் என்பது மிகவும் மந்தமாக செல்கிறது. அந்த அளவிற்கு பரபரப்பு இல்லை.
விநாயகர் சிலையை ஆர்வத்தோடு யாரும் வாங்குவது மாதிரி தெரியவில்லை. அடிக்கடி மழை பெய்வதால் வியாபாரத்தை பெரிதும் பாதிக்கிறது. தற்போது நிறைய வாடிக்கையாளர்கள் வெளியூர்களுக்குச் சென்று வாங்க ஆரம்பித்துள்ளனர். 100ல் 25 பேர் தான் இங்கு வாங்குகின்றனர். மற்றவர்கள் வெளியில் தான் வாங்குகின்றனர். இது மிகவும் கடினமாக உள்ளது" என்றார்.
பின்னர் பேசிய வியாபாரி குருமூர்த்தி, "எனது சொந்த ஊர் பாண்டிச்சேரி. எங்கள் தாத்தா காலத்தில் இந்த ஊருக்கு வந்தோம். நாங்கள் இப்போது அரசு அறிவுறுத்தலின்படி வேஸ்ட் பேப்பர் வைத்து சிலைகள் செய்கிறோம். இந்த வருடம் ராணுவ வீரர் விநாயகர் சிலையும், விவசாயி விநாயகர் சிலையும் வரவுள்ளது.
ராணுவ வீரரும், விவசாயியும் நாட்டின் இரு கண்கள் அதன் அடிப்படையில் அமைய இருக்கிறது. அந்த சிலை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடுவார்கள். நான் இந்த வருடம் கல்வியில் விழிப்புணர்வு வேண்டும் என்று பண்டிட் விநாயகர் செய்துகொண்டு இருக்கிறேன். எப்போதும் எங்கள் பகுதிக்கு புதிதாக ஒரு சிலையை செய்வேன். இந்த வருடமும் அதேபோல தான் செய்துகொண்டு இருக்கிறேன்.
தற்போது ஆங்காங்கே பெய்து வரும் மழையினால் வியாபாரிகளுக்கு சிறிதளவு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்றும் அதற்கு முன் தினமும் மழை பெய்யாமல் இருந்தால் விற்பனை சீராக இருக்கும்" என தெரிவித்தார்.
பின்னர் அப்பகுதியில் வாழும் நந்தகோபால் கூறுகையில், "இங்கு பல பகுதிகளில் இருந்து விநாயகர் சிலை வாங்குவதற்கு மக்கள் வருகின்றனர். தற்போது வெளியூர்களில் இருந்தும் இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே விநாயகர் சிலைகள் இங்கு வந்துவிடும். மக்களும் ஒவ்வொரு நாளும் வந்து வாங்கி செல்வர். முக்கியமாக வார இறுதி நாட்கள் கூட்டம் கூட்டமாக மக்கள் வருவார்கள். அப்போது வியாபாரம் நன்றாக இருக்கும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : கற்பக விநாயகர், எலி விநாயகர்..என மயிலாடுதுறையில் விதவிதமாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சிலைகள்! - vinayagar chaturthi 2024