சென்னை: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சராயத்தால், அந்தப் பகுதியே தொடர்ந்து சோகத்தில் இருந்து மீளாமல் உள்ளது. ஒரே நாளில் 20க்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியது கள்ளச்சாராயம்.
கருணாபுரம் மட்டும் இல்லாமல் கோட்டைமேடு, சிறுவங்கூர், வன்னஞ்சூர், சேஷசமுத்திரம், இளந்தை, கள்ளக்குறிச்சி நகரம், மாதவச்சேரி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மது அருந்தியவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (ஜூன் 24) மாலை 5 மணி நிலவரத்தின்படி கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 156 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 8 பேர் குணமடைந்து வீடு திரும்பு உள்ளதாகவும், 58 பேர் இறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறும்போது, ”சின்னம்மா என்கின்ற மூதாட்டி இளம் வயதிலிருந்து குடிப்பார். அவர் டாஸ்மாக் கடைக்குச் சென்று மதுபானம் வாங்கி குடிப்பார். சில நேரங்களில் கள்ளச் சாராயம் வாங்கியும் குடிப்பார். தற்போது கள்ளச்சாரயத்தை குடித்ததால் தான் அவருக்கு வாந்தி வந்தது. அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தோம். பின்பு சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் இனிமேல் சாராயம் இருக்கக்கூடாது. முதலில் அதை அழிக்க வேண்டும். எல்லா டாஸ்மாக் கடைகளையும் இழுத்து மூட வேண்டும். ஆண்கள் சிலர் டாஸ்மாக் கடை தூரமாக இருப்பதால் அங்கு செல்ல முடியாமல் அருகிலேயே விற்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடிக்கின்றனர்.
தற்போது இப்பகுதியில் கள்ளச்சாராயம் அதிகமாகிவிட்டது. விடியற்காலையில் 4 மணிக்கு விற்க ஆரம்பிக்கின்றனர். இந்த உயிரிழப்புக்கு பின்பாவது கள்ளக்குறிச்சி திருந்த வேண்டும். தயவுசெய்து இதை நிறுத்த வேண்டும். குடியாலே இந்த ஊரே அழிந்துவிட்டது.
இதனால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் எவ்வளவு பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் சேமிக்கின்ற பணத்தை கணவன்மார்கள் எடுத்துட்டுப் போய் குடிக்கிறார்கள். ரூ.60 கிடைத்தால் போதும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துவிட்டு படுத்துவிடுகிறார்கள். வேலைக்குச் செல்வதில்லை. அறுபது ரூபாயால் வாழ்க்கையே போயிடுச்சு. கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் சிறு சிறு பிள்ளைகள் உள்ளனர். இப்போ அந்த பிள்ளைகளுக்கு யார் இருக்கா?
கள்ளச்சாராயத்தை அருந்தி அவர்கள் உயிரிழந்துவிட்டார்கள். இப்போ அவஸ்தைப்படுவது பிள்ளைகளும், வீட்டில் இருக்கும் பெண்களும்தான். டாஸ்மாக் இல்லையென்றாலும் சட்டவிரோதமாக ரூ.200, 300 வாங்கி குடிக்கின்றனர். இதனால் நாங்கள் நரக வேதனையை அனுபவித்து வருகிறோம். ஆதலால் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்”.
இதுகுறித்து நந்தினி என்ற பெண் கூறும்போது, "எனக்கு 3 குழந்தைகள். எனது கணவர் தினமும் குடித்துவிட்டு என்னை அடிப்பார். எனக்கு போவதற்கு இடம் இல்லாததால் அடிவாங்கிக் கொண்டு வாழ்கிறேன். இதுபோன்று நிலைமை ஏற்பட்டால் எனது குழந்தைகளை பாதுகாப்பது யார்? பெண்களின் நலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்" என்கிறார் நந்தினி கண்ணீர் ததும்ப.
இதையும் படிங்க: தமிழகத்தில் கைம்பெண்கள் அதிகரிக்க மதுவே காரணம்: ஆய்வறிக்கையில் தகவல்! - increase widowhood in tamil nadu