ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி மேட்டுக்கடை பகுதியில் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளரான பிரகாஷ்-க்கு அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, திமுக வேட்பாளர் வெற்றி பெறச் செய்ய வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து அமைச்சர் முத்துசாமி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், "தேர்தல் நடைபெறும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளில், ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதற்கு கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட வேண்டும்.
இந்த தேர்தலை எப்போதும் வரக்கூடிய தேர்தலாக பார்க்க வேண்டாம். ஏனெனில், வெற்றி பெறுவதில் சிறு தவறு நடந்தால் கூட, இந்தியாவில் நடைபெறக்கூடிய கடைசி தேர்தலாக இத்தேர்தல் அமைந்துவிடும். பிரதமர் மோடி, சர்வாதிகாரி போல நடந்துகொண்டு இருக்கிறார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை, மத்திய அரசு சிறையில் தள்ளியுள்ளது. டெல்லியில் உள்ளவர்கள் சிறைக்கு செல்வது நியாயம்தான்.
ஆனால் கெஜ்ரிவால் அல்ல, மோடி தான் சிறைக்குச் செல்ல வேண்டும். இந்த தேர்தலில் நம்முடைய குழந்தைகளின் எதிர்காலமும் சேர்த்து அடங்கியுள்ளது. பதவி பற்றி கவலைப்படாமல், எதிர்வரும் பிரச்னைகள் பற்றியும் கவலை கொள்ளமால், மக்களுக்கு நல்லது செய்யக்கூடியவர் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும்தான்" எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி, "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைத்தது போன்று, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரையும் வெற்றியடையச் செய்ய, திமுக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பாடுபட வேண்டும். மத்திய அரசு மீது, முதலமைச்சர் மக்கள் மத்தியில் வைக்கும் புகார்களுக்கு கோபப்படுகிறார்கள்.
மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம் கொண்டு வரும்போது, அரசு நிதி நிலைமை மோசமாக இருந்தது. ஆனாலும், மகளிர் நலன் கருதி திட்டம் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து, மலைப் பகுதியில் நகரப் பேருந்து இல்லாததால், மலைப்பகுதியில் இருந்து பெண்கள் புறநகர் பேருந்தில் கட்டணமில்லா பயணம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.
தேர்தல் நேரத்தில், மகளிர் மற்றும் தொண்டர்கள் குழு, வீடு வீடாகச் சென்று அரசுத் திட்டம் குறித்து பிரச்சாரம் செய்யுங்கள். 1 கோடியே 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து, விடுபட்ட மகளிருக்கு வழங்க மாவட்ட ஆட்சியர் மூலம் மறு ஆய்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கு மண்டலம் மிகப்பெரிய வெற்றி பெற, சூழ்நிலை திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது.
எவ்வளவு பிரச்னை இருந்தாலும், வாக்காளர்கள் மத்தியில் திட்டத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும். ஈரோடு, கரூர், நாமக்கல் ஒருங்கிணைந்து வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய வரும் 31ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஈரோடு வர உள்ளார். 40 தொகுதிகளில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றால், மத்தியில் நாம் தான் ஆட்சி அமைப்போம்.
அப்படி அமையும் போது, தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டம் கொண்டு வர முடியும். இந்த தேர்தலில் பெறக்கூடிய வெற்றி, வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் வகையில் இருக்கும். திமுக கூட்டணி நிர்வாகிகள் எந்த தேர்தல் விதிமீறல்களிலும் ஈடுபடக் கூடாது. இந்தியா முழுவதும் பேசப்பட்டு, அதன் பின்னர் தொகுக்கப்பட்டதாக திமுக தேர்தல் அறிக்கை உள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? - Viluppuram Lok Sabha Constituency