திருவாரூர்: முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் உலகப் பிரசித்தி பெற்ற தர்கா அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுக் காலப் பழமையான இந்த தர்காவிற்குத் தினந்தோறும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், அதேபோல் அண்டை நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மதத்தினர் வருகை புரிகின்றனர்.
குறிப்பாக, இந்த தர்காவில் நடைபெறும் 'கந்தூரி விழா' என்பது உலகப் புகழ் பெற்றது. அதனைத் தொடர்ந்து, சந்தனக்கூடு நடைபெறும் நிகழ்ச்சியும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நிகழ்வில், இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு வருகின்றனர். மேலும், தர்காவிற்குச் சொந்தமாக அதன் அருகில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த குளம் உள்ளது.
இந்த தர்காவிற்கு வருகின்றவர்கள் இந்தக் குளத்தில் உள்ள நீரைப் புனித நீராகக் கருதி அதனைப் பருகவும் செய்கின்றனர். மேலும், இந்தக் குளத்தில் உள்ள நீரானது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகச் சேரும் சகதியுமாக அசுத்தமாக இருந்து வருவதால், இந்தக் குளத்தைச் சுத்தம் செய்து தர வேண்டும். மேலும், தர்காவைச் சீரமைத்துத் தர வேண்டும் என தர்கா சார்பாக இஸ்லாமியக் கூட்டமைப்பு பல்வேறு முறை மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகளைச் சந்தித்து மனுக்கள் அளித்துள்ளனர்.
தற்போது, அந்த மனுக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்காததால் நாடாளுமன்றத் தேர்தலை இஸ்லாமியக் கூட்டமைப்பினர் புறக்கணிக்கப் போவதாக தர்காவின் வாயிலில் ஃபிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். மேலும் இந்தப் பகுதியில் 650க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், இந்தக் குளம் மற்றும் தர்காவைச் சீர் செய்து கொடுத்தால் மட்டுமே நாங்கள் தேர்தலில் வாக்களிப்போம், இல்லை என்றால் வாக்களிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவாரூரில் மூளைச் சாவடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்: கை கூப்பி நன்றி சொன்ன மருத்துவக் கல்லூரி முதல்வர்