அரியலூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில், சிதம்பரத்தில் விசிகவின் தலைவர் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சிதம்பரம் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். மேலும், அப்போது வைப்புத் தொகையாக 12 ஆயிரத்து 500 ரூயாய் செலுத்தி உறுதி மொழியை ஏற்றுக் கொண்டார்.
அப்போது, திமுக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன் கூறியதாவது, "தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு உடனடியாக சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
ஆனால் எதிர்கட்சியுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையமே ஒரு சார்ந்து நடந்து கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். அப்போதுதான் நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்படும். எனவே, தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாமல், நேர்மையாக இந்த தேர்தலை நடத்த வேண்டும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் பாஜக கட்சி ஒரு பூஜ்ஜியம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே, பாஜக தமிழ்நாட்டில் என்ன சொன்னாலும் அது எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. பாஜக தென்மாநிலங்கள் முழுவதும் கடும் பின்னடைவு அல்லது தோல்வியைச் சந்திக்கும்.
நான் என்றும் மக்கள் பணியைத்தான் ஆற்றுகிறேன். உறங்கும் நேரத்தை தவிர, சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாக மக்களோடு தான் இருக்கிறேன். இதனை தொகுதி மக்கள் நன்கு அறிவார்கள். சொந்த தொகுதியில் ஒரு வேட்பாளராகத்தான் களத்தில் நிற்கிறேன். மக்கள் மீண்டும் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுப்பார்கள். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரம் தொகுதியும் ஒன்று" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பம்பரம் சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு.. மதிமுகவின் திட்டம் குறித்து துரை வைகோ கூறியது என்ன?